Header Ads



தாஜூடீன் கொலை விசாரணை மந்தகதி - குடும்பத்தினர் குற்றச்சாட்டு, துரிதப்படுத்த நீதிபதியும் உத்தரவு

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் தராதரம் பாராது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் நேற்று, புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

கொலை வழக்குத் தொடர்பில் அலரி மாளிகை, கார்ல்டன் இல்லம் ஆகியனவற்றுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்கள் வெளியாகினால் தராதரம் பாராது சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சட்டத்தின் முன்னிலையில் எவரும் விசேட நபர்கள் கிடையாது, அனைவருக்கும் சட்டம் சமமானதேயாகும்.எனவே விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக விசாரணை நடத்த போதியளவு சாட்சியங்கள் காணப்பட்டால் அச்சமின்றி விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனவும், நீதிமன்றங்கள் அதற்கு தடை விதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

விசாரணைகள் மந்த கதியில் நடத்தப்படுவதாக தாஜூடீனின் குடும்ப உறுப்பினர்கள் சுமத்திய குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.