7000 கார்களுடன், கப்பல் பணயம் பிடிப்பு - அம்பாந்தோட்டையில் பரபரப்பு
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்கலன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சீன நிறுவனம் பொறுப்பேற்றால், தமது வேலைகள் பறிபோகும் என்று, அம்பாந்தோட்டை துறைமுகத் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 5ஆம் நாள் இரவு, அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வந்த பாரிய ஜப்பானிய கப்பலை வெளியேற விடாமல் கடந்த நான்கு நாட்களாகத் பணியாளர்கள் தடுத்து வைத்துள்ளனர்.
Hyperion Highway என்ற இந்த ஜப்பானிய கொள்கலன் கப்பலில், 7000 கார்கள் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்தக் கப்பல் அம்பாந்தோட்டையில் இருந்து புறப்பட்டு, நாளை 11 ஆம் நாள், ஓமானின், சோகார் துறைமுகத்தைச் சென்றடைந்திருக்க வேண்டும்.
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான Hyperion Highway கடந்த 7ஆம் நாள் தொடக்கம், துறைமுகத் தொழிலாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் பிலிப்பைன்ஸ் மற்றும் பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 25 மாலுமிகள் இருக்கின்றனர்.
இந்தக் கப்பலை வெளியேற விடாமல், பாரம் தூக்கிகளை பணியாளர்கள் கீழ் இறக்கி விட்டுள்ளனர். அத்துடன், வழிகாட்டும் படகு சேவையில் ஈடுபடாததாலும், இந்தக் கப்பல், துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தமக்கு நாளொன்றுக்கு 70 ஆயிரம் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமது கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஜப்பானிய நிறுவனம், உள்ளூர் முகவர் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கு இதுகுறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் பேச்சுக்களில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை.
பேச்சுக்களை நடத்தி வரும் அரசாங்கம் காவல்துறையினரையும், கடற்படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்கள் துறைமுகத்துக்குள் கடற்படையினரின் வாகனங்கள் நுழைவதை தடுக்கும் வகையில் வீதிக்குக் குறுக்கே மண் அணை ஒன்றை எழுப்பியுள்ளனர்.
கடற்படையினர் தலையீடு செய்தால் தாம் கடலில் குதிப்போம் என்று சில பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இரண்டு டிங்கி படகுகளில் கடற்படையினர் கப்பலுக்குச் செல்ல முயன்ற போது, சில பணியாளர்கள் கடலில் குதிக்க முயன்றனர். இதனால் கடற்படைப் படகுகள் திரும்பியுள்ளன.
ஜப்பானிய கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை ஜப்பானிய மற்றும் சீன தூதரகங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
கப்பலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை தாம் எடுத்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு கொள்கலன் கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே தரித்து நிற்கின்றன. போராட்டத்தினால் இவை இந்தியா அல்லது சிங்கப்பூர் துறைமுகத்துக்கு செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுக் கப்பல் ஒன்று சிறிலங்கா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்படுவதென்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம எச்சரித்துள்ளார்.
Post a Comment