இலத்திரனியல் இயந்திரங்களில் மில்லியன் கணக்கான பணமோசடி - 4 பல்கேரிய பிரஜைகள் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
தனியார் வங்கிகளின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களிலிருந்து (ஏ.ரி.எம்.) மில்லியன் கணக்கில் பணம் கொள்ளையிட்டு வந்த குழுவொன்றின் வலையமைப்பில் இணைந்து செயற்பட்ட நான்கு வெளிநாட்டவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த நால்வரையே இவ்வாறு குற்றப்புலனாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் தெற்கு பாதாள உலகப் புள்ளி ஒருவர் உள்ளிட்ட இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்து வந்த நிலையிலேயே மேற்படி நான்கு வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவிலவின் ஆலோசனைக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.ஏ.என். பிரியதர்ஷ தலைமையிலான குழுவினரே இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவிலும் மோசடியில் ஈடுபட்ட கும்பல்
இந்தத் திட்டமிட்ட குற்றக் குழுவானது இலங்கை மற்றும் இந்தியாவில் இத்தகைய கடனட்டைத் தகவல்களை திருடி பணம் கொள்ளையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தகவல்களை திருட ஏ.ரி.எம். நிலையங்களில் விசேட கருவி ஒன்றை இவர்கள் பொருத்தியுள்ளமையும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
திருடும் போதே கைது செய்யப்பட்டனர்
கைதான வெளிநாட்டவர்கள் ஏ.ரி.எம். நிலையங்களில் பணம் திருடும் போதே கைது செய்யப்பட்டதாக குறிப்பிடும் பொலிஸார், இந்த மோசடி குற்றக் குழுவின் வலையமைப்பு தொடர்பில் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்தனர்.
தனியார் வங்கியில் 5 மில்லியன் மோசடி
கடந்த 23 ஆம் திகதி குறித்த தனியார் வங்கி ஒன்று தமது வங்கியில் இருந்து போலி கடனட்டை ஒன்றின் ஊடாக 5 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடளித்துள்ளது. இந்நிலையிலேயே இது தொடர்பிலான விசாரணைகள் சிறப்பு பொலிஸ் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வங்கியிலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்ற சில தரவுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த திட்டமிட்ட வலையமைப்பானது மஹரகம, பிலியந்தல, மொரட்டுவ, வெலிப்பன்ன, அம்பலாந்தோட்டை, கதிர்காமம், வெலிகம, காலி, மாத்தறை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக் கொண்டனர்.
உளவுப் பணிகளில் பொலிஸார் இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நான்கு வெளி நாட்டு வங்கிகளின் கடனட்டைகளைப் பயன்படுத்தி மிரிஸ்ஸ பகுதியின் வங்கி ஒன்றில் பணம் பெறப்பட்டுள்ளமையும் அதுவும் மோசடி நடவடிக்கை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி மேற்பார்வை மற்றும் உளவு வேலைகளில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியுள்ளனர். இதன் போது சந்தேகத்துக்கு இடமான வாகனங்களின் இலக்கங்கள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான கொடுக்கல் வாங்கல்களுக்காக வங்கிகளுக்கு வந்து செல்வோர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அந்த தகவல்கள் அனைத்தும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதனையடுத்தே முதல் சந்தேக நபரான தினேஷ் வீரதுங்க என்பவரை பிலியந்தல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
காரில் ஏற முற்பட்டபோது கைதான முக்கிய புள்ளி
சந்தேக நபர் வீட்டிலிருந்து தனது காரில் வெளியேற முற்பட்ட போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவரது காருக்குள் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 78 போலி கடனட்டைகளைக் கைப்பற்றினர். பின்னர் அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர். இதன் போது அந்த வீட்டில் ஓர் அறை பூட்டப்பட்டிருந்துள்ளது. அந்த அறை காலியைச் சேர்ந்த இந்த கடனட்டை மோசடி கொள்ளையுடன் தொடர்புடைய நபருடையது என உறுதிப்படுத்திய பொலிஸார் அந்த அறையையும் சோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து காலி உனவட்டுன பகுதியில் வைத்து சந்தேக நபரான சுரேஷ் மதுரங்க எனும் நபரை பொலிஸார் கைது செய்தனர்.
ஆயுதங்கள்,ரவைகள் போதைப் பொருள் போலி கடனட்டைகள் கைப்பற்றப் பட்டன இதன்போது சந்தேக நபரின் காலி வீட்டை பொலிஸார் சோதனை செய்து அங்கிருந்து 9 மில்லி மீற்றர் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி -1, 6 தோட்டாக்கள் மற்றும் 30 கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து பிலியந்தலையில் உள்ள வீட்டில் அவரது பூட்டப்பட்ட அறையை பொலிஸார் சோதனை செய்தனர். இதன் போது 9 மில்லி மீற்றர் மைக்ரோ ரக துப்பாக்கி, 57 வெள்ளை நிறபோலி கடனட்டைகள், தங்க நிற கடனட்டைகள் 33 பண மோசடிக்கான தகவல்களை களவாட பயன்படுத்தப்பட்ட கோர்டர் இயந்திரம் மற்றும் 10 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைதான நபர் தெற்கு பாதாள உலகத் தவர் என தெரிவித்த பொலிஸார் தெற்கு பாதாள உலகத்தவர்களுடன் இணைந்து கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சந் தேக நபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.
இந்த விசாரணைகளில் வெளிப் படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமை வாக நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிரிஸ்ஸ பகுதியில் வைத்து மேற்படி வெளி நாட்டவர்களைக் கைது செய்தனர்.
Post a Comment