அரசாங்கத்துக்கு 48 மணிநேர காலக்கெடு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, அடுத்துவரும் 48 மணிநேரத்துக்குள் வெளியிடுவதற்கு, அரசாங்கமும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சருமான பைஸார் முஸ்தபாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று (28), காலக்கெடு விதித்தனர்.
எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஏற்கெனவே அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதி, நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவ்வெதிரணி வலியுறுத்தியது.
கொழும்பில், நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
“எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை, அரசியல் கட்சிகள் பக்கம் திசைதிருப்பிவிட்டு, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகளை, அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு, சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்படவேண்டி இருந்தது. எனினும், தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான அறிக்கையை, குழுவின் செயலாளர் நிராகரித்திருந்தார். எனவே, சரியான தமிழ் மொழிப்பெயர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளும், பதில் அமைச்சர் பிரியங்கர ஜயரத்தினவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. எனவே, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அவசியம், அரசாங்கத்துக்கு கிடையாது” என, அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, சூப்பர் அமைச்சரை உருவாக்குவதற்கு அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முயற்சியை, மாகாண சபைகள் தோற்கடித்தமையை, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பாராட்டினார்.
எனினும், இந்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அதனை எதிர்ப்பதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு அமைச்சருக்கு துணிச்சல் இருக்கவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.
Post a Comment