மடவளையில் படுகொலையான 10 முஸ்லிம்களின் நினைவாக..!
05-12-2001 ஆம் ஆண்டு மடவளைப் பிரதேசத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 10 முஸ்லிம் வாலிபர்களின் நினைவாக எழுதி, வெளிவந்த கவிதை இது.
நாட்டைக் கட்டி எழுப்ப அல்ல.....
நம்பிய மக்களை சுட்டுக் கொல்ல
பதவிக்கு வந்தவன் நான்.
என் அலுவலக மேசை லாச்சிக்குள்
குறட்டைவிட்டு
சட்டமும் நீதியும் நிம்மதியாகத் தூங்குகையில்
மூட்டைப் பூச்சியை கசக்கிச் சாகவைப்பது போல
மனிதர்களைக் கொன்று தெருவில் வீச
அதிகாரம் இருக்கிறதெனக்கு.
*
ஆட்சி என்னிடம்.
வாக்குப் பெட்டிகளை ஆள்வைத்துக் கடத்தி வந்து
தனி நீல நிறத்தில் செய்து முடிப்பேன்
225 எம்பி கதிரைகளையும்.
எனக்கென்ன பயம்?
முப்படைகளும் எனது தேசிய சட்டைப் பைக்குள்
மூச்சு இழுத்து விட்டுக் கொண்டிருக்கையில்.
*
எனது ராஜாங்கமே இந்த பெளத்த தேசத்தில்.
எனது மூதாதையரின் அத்தாட்சியான இது
"அபே ரட!"
போதி மரத்தின் காலடியில்
உங்கள் மஸ்ஜித்களை பிச்சை எடுக்கச் செய்வேன்.
*
இன்னும் கேள்.....!
எல்லா மாவட்டங்களிலும்
சிங்களத்தின் முன்னால் உங்கள் தமிழ் மொழி
கை கட்டி வாய் பொத்தி அடங்கி நிற்க வேண்டும்.
எனது கட்டளைகளை மட்டுமே
அரசாள அங்கீகரிப்பேன்.
உங்கள் இஸ்லாம் மார்க்கத்தை
அறுத்துக் கறி சமைத்து
தன்சல தானம் கொடுப்பேன்
போயா பொஸன் தினங்களில்.
*
என் சுட்டு விரல் அசைந்தாலே
கண்டி மாநகரம் குலை நடுங்கி நிற்கும்.
தலதா மாளிகையை மந்திரக் கோலாக மாற்றி
என் தொண்டர்களின் கைக்கு
காரியம் முடிக்கும் கருவியாகக் கொடுப்பேன்.
உங்கள் பல்லாயிரக் கணக்கான வாக்குப் புள்ளடிகளை
அரசாங்க ஆயுதங்களின் மேற்பார்வையில்
கள்ள வாக்குப் போட்டு
பெட்டி நிறைப்பார்கள் என்னருமைப் புதல்வர்கள்!
*
என் புனித கடமையான
கொலை குத்து வெட்டு மோசடிகளை
தன் பணியாக செய்து முடிக்கும் எனதாதரவாளர்கள்
காத்து நிற்கிறார்கள் கால் வலிக்க.
நீங்கள் தனித்துவமாக வளர்க்கும் மரத்தை
வெட்டிச் சாய்த்து
சொகுசு நாற்காலிகள் செய்து
அமரக் கொடுப்பேன் அவர்களுக்கு.
*
உங்கள் தனித்துவ அரசியலை
மலைகளை விலக்கி ஓடும்
ஏதோவோர் நதியில் கரைத்துவிட்டு
கை கழுவிச் சென்றுவிடுங்கள்.
மடவலையில் 10 முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடித் தின்றது
போதவில்லை என்ற பசி பட்டினியோடிருக்கும்
என் குண்டர்கள்
இன்னுமொரு உங்கள் ஊரில்
இன்னும் பலபேரைக் கொன்றுவிட்டு
இரத்தம் பட்ட கொலைக் கரங்களைக் கழுவ
உங்கள் ஹவுழுகளைத் தேடியே வருவார்கள்.
*
அவர்களுக்கு ஆயுதம் வழங்கவும்
அகப்பட்டால் வெளியே எடுத்துவிடவும்
இன்னும் பாதுகாப்பாக என்னிடம் இருக்கிறது
அரச செல்வாக்கும் அபகரித்த செல்வமும்!
-எம்.எல்.எம்.அன்ஸார்
Post a Comment