முஸ்லிம் விவாக சட்டத்தில் நிபந்தனை வேண்டாம் - EU விடம் கிழக்கு முதலமைச்சர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்கு் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது
இன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எஸ் தண்டாயுதபானி, கி.துரைராஜசிங்கம் மற்றும் ஆரியவதி கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டதுடன் முதலமைச்சரின் செயலாளர் அஸீஸ் அவர்களும் இதன் போது பங்கேற்றார்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம் திருமணச்சட்டம் தொடர்பான நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தனிப்பட்ட சமூகத்தின் மத நம்பிக்கை சார்ந்த விடயங்களை நிபந்தனைகளாக முன்வைப்பதை தவிர்த்து, இலங்கையில் தற்போது பரவிக் காணப்படும் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை நிபந்தனைகளாக முன்வைக்கவேண்டுமென ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் மூவின மக்களும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்துவரும் நல்லாட்சியில் இவ்வாறான நிபந்தனை அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் நல்லாட்சி தொடர்பில் முதலமைச்சர் இதன்போது எடுத்துரைத்தார்.
அத்துடன் இதன்போது கிழக்கு மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள வேலையில்லாப் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துத்தல் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
Post a Comment