டொனால்ட் ட்ரம்பின், அமைச்சரவை பிரதிநிதி இலங்கை வருகிறார்
அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலர், அடுத்த ஆண்டில் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க- சிறிலங்கா கூட்டாண்மை கலந்துரையாடல் கடந்த பெப்ரவரி மாதம், வொசிங்டனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு கலந்துரையாடல். இதன் அடுத்த சுற்றுக் கலந்துரையாடல் கொழும்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட வேண்டும்.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலர் கொழும்பு வருவார். அவரை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோம்” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க- சிறிலங்கா கூட்டாண்மை கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சி நிரல் இன்னமும் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அமெரிக்காவில் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள இராஜாங்கச் செயலர் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை.
எனினும், முன்னாள் சபாநாயகர் நியூட் ஜிங்ரிச், செனட் வெளிவிவகாரக் குழுவின் தற்போதைய தலைவர் பொப் கோர்கர், ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜோன் போல்டன் ஆகிய மூவரும் அடுத்த இராஜாங்கச் செயலர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment