புதிய அரசியலமைப்பு, மார்ச்சில் பொதுவாக்கெடுப்பு..?
புதிய அரசியலமைப்புத் தொடர்பான மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க உட்தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய அரசியலமைப்பு யோசனைக்கு பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்தவாரம் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடத்தப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக, பொதுவாக்கெடுப்பு நடத்துவது குறித்து நீண்டநேரம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு உப குழுக்களினதும், பரிந்துரைகளுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அங்கீகாரம் அளித்த பின்னர், பொதுவாக்கெடுப்புக்கான நாள் தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தல் மேலும் பிற்போடப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
Post a Comment