Header Ads



''அந்த அல்லாஹ், எங்கு சென்றுவிட்டான்..?''


-மஹதி- 

ஒரு நாள், அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனா நகரை விட்டு வெளியூருக்குப் பறப்பட்டார்கள். அவர்களுடன் நண்பர்களும் கூட இருந்தனர். வழியில் உணவு வேளை வந்தது. அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், நண்பர்களும் பசியாற அமர்ந்தனர்.

அச்சமயம், அங்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஒரு இடையன் வந்தான். அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தான். அவன் பசியால் நலிவுற்றிருப்பதை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அவனையும் சாப்பிட அழைத்தார்கள்.

‘மன்னிக்க வேண்டும்! நான் நோன்பு நோற்றிருக்கிறேன். தங்களின் அன்பு அழைப்பை ஏற்று உணவருந்த முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்று அவன் தெரிவித்தான். கோடை வெயில் தகித்துக் கொண்டிருந்தது. பாலைவனத்தில் வீசும் ‘லூ’ எனும் அனல்காற்றுகடுமையாக வீசிக் கொண்டிருந்தது.

‘இந்த கடுமையான கோடைக் காலத்தில் - தன்னந்தனியே இருக்கையில் நோன்பு நோற்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவினார்கள்.

‘நான் மறுமைக்காக நன்மைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். ‘அத்துன்யா மஸ்ரஅதுல் ஆஃகிறதி’ - இந்த உலகம் மறுமைக்கான பயிரை – அதாவது நன்மைகளை விளைவித்துக் கொள்ளும் நிலமாகும்’ என்று அந்த ஆட்டிடையன் சொன்னான்.

அந்த சொல்லை அவன் நினைவு படுத்தியதையும், அதை அவன் கடைபிடிப்பதையும் கண்ட அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு மிகவும் வியப்படைந்தார்கள்.

மறுமைக்காக நன்மை சேகரிப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான், ‘குலூ வஷ்ரபூ ஹனீஅம் பிமா அஸ்லஃப்தும் ஃபில் அய்யாமில் ஃகாலியா’ - அதாவது சென்ற நாட்களில் நீங்கள் சேகரித்து வைத்தவை (நன்மை) களின் காரணமாக (இப்போது) தாராளமாக இவைகளைப் புசியுங்கள், அருந்துங்கள்’ என்று.

அந்த சுவர்க்கக் கனிகளைச் சுவைத்து என்றென்றும் இன்புற்றிருக்கவே அந்த இடையன் விரும்பினான். இந்த உலகிலுள்ள அற்ப சுகத்திற்காக மறுமையின் பேரின்பத்தை இழக்க அவன் மனம் விரும்பவில்லை. அவன் உள்ளத்தை அறிந்து கொண்ட அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு உள்ளூர அவனுக்காக துஆச்செய்தார்கள். மேலும் அவனைச் சோதிக்கவும் விரும்பினார்கள்.

‘சகோதரனே! எனக்கு ஒரு ஆடு தேவை. என்ன விலை என்று சொல் பணம் தருகிறேன். ஆட்டை அறுத்துச் சமைத்து உனக்கும் தருகிறேன். நோன்பு திறக்க உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்’ என்றார்கள் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு.

‘மன்னிக்கவும், இந்த ஆடுகள் எனக்குச் சொந்தமானவை அல்ல. என் முதலாளியுடைவை. நான் அவரது அடிமை. எனக்கு இடப்பட்டுள்ள கடமையை மட்டுமே நான் செய்ய முடியும். வேண்டுமானால் என் முதலாளியிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்!’ என்றான் அந்த இடையன்.

அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘பரவாயில்லை. நீ ஆட்டை விற்றுப் பணம் பெற்றுக்கொள். உன் முதலாளி கேட்டால் ஆடு காணாமல் போய்விட்டது என்று சொல்லி விடு! உன் முதலாளிக்கு உண்மை எப்படித் தெரியப் போகிறது?’ என்றார்கள்.

‘மன்னிக்க வேண்டும்! பொய்யா சொல்லச் சொல்கிறீர்கள்! ஒர் உண்மை முஸ்லீமுக்கு அது அடுக்குமா? பாவத்தைச் சுமந்து நரகத்தில் வேதனைப்பட நான் தயாராக இல்லை. என் முதலாளி பார்க்காவிட்டாலும் அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனை நான் ஏமாற்ற முடியுமா?’ என்று கேட்டான் இடையன்.

அவனது பதில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனதை நெகிழச் செய்தது. ‘ஃபஅய்னல்லாஹ், ஃபஅய்னல்லாஹ், (அந்த அல்லாஹ் எங்கு சென்றுவிட்டான்?, அந்த அல்லாஹ் எங்கு சென்றுவிட்டான்?) என்று அந்த இடையனின் நாவு உச்சரித்துக் கொண்டிருந்ததையும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.

இந்த சம்பவம் நமக்கும் ஒரு பாடமாக அமையட்டும். மறுமைக்கான விளைநிலமாக இவ்வுலகை பயன்படுத்தி இறையோனின் அளைப் பெறுவோம்.

2 comments:

  1. இன்ஷாஅல்லாஹ்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.