ஹஜ் ஏற்பாடுகளுக்கு, புதிய சட்டம்
முஸ்லிம்களின் இறுதிக் கடமையே புனித ஹஜ்ஜாகும். ஒவ்வோர் முஸ்லிமும் தனது வாழ்க்கையில் ஒரு தடவையேனும் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே காத்திருக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகள் குறிப்பாக ஹஜ் கோட்டா பகிர்வு முறைகள் பல சவால்களுக்குட்பட்டு வந்துள்ளன. தொடராக நீதிமன்றின் வாசற்படிகளையும் ஹஜ்முகவர்கள் ஏறியிறங்கினர். கடந்த வருடமும் ஹஜ் கோட்டா பகிர்வில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த ஹஜ் வழிமுறைகள் (Guide Lines) மீறப்பட்டு விட்டதாக 10 ஹஜ் முகவர்கள் உயர்நீதிமன்றில் இறுதி நேரத்தில் மனுவொன்றினைத் தாக்கல் செய்தனர். மனுவில் பிரதிவாதிகளாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் என்போர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேலும் சில ஹஜ் யாத்திரிகள் தமது பயணத்துக்கு தடையேற்பட்டு விடக்கூடாது என்று இடையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்தனர். இதனையடுத்து கோட்டா பகிர்வு முறைக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
தற்போது அடுத்த வருட ஹஜ் கடமைக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதுவரை 10 ஆயிரம் விண்ணப்பதாரிகள் ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஹஜ் ஏற்பாடுகளை சவால்கள் ஏற்படாத வகையில் ஹஜ் பயணிகளுக்கும் ஹஜ் முகவர்களுக்கும் பாதிப்புகள் இல்லாத வகையில் முன்னெடுப்பதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இதற்கென சட்டமூலமொன்றினைத் தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவரைபுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டுள்ளார். அரச ஹஜ் குழு முன்னாள் நீதியரசருடனான கலந்துரையாடலை இன்று ஆரம்பிக்கவுள்ளது.
ஹஜ் ஏற்பாடுகளுக்கென சட்டமொன்றை நிறைவேற்றிக் கொண்டால் எதிர்காலத்தில் ஹஜ் விடயங்களில் சவால்கள் தவிர்க்கப்படும். ஹஜ்ஜாஜிகளின் நலன்களும் ஹஜ் முகவர்களின் நலன்களும் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும். எவருக்கும் நீதிமன்ற படிகலேறவேண்டிய தேவை ஏற்படாது.
முஸ்லிம்கள் தமது சமய, கலாசார விடயங்களில் பெரும்பான்மை இனவாதிகளினால் பல சவால்களை எதிர்நோக்கியுள்ள இக்காலகட்டத்தில், ஹஜ் ஏற்பாடுகளுக்கென தனியான சட்டமொன்றினை இயற்றிக்கொள்வது அவசியமானதாகும். இது விடயத்தில் நாமனைவரும் ஹஜ் சட்ட வரைபுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஹஜ் முகவர்கள் தமது வர்த்தக நோக்கத்தையே அடிப்படையாகக் கொள்ளாது ஹஜ் ஏற்பாடுகளை ஒரு புனித கடமையாக கருத வேண்டும். ஹஜ் ஜாஜிகளின் நலன்பேண தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
திட்டமிட்டுள்ளபடி எதிர்வரும் ஆறுமாத காலத்திற்குள் ஹஜ் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டால் ஊழல்களற்ற இறுதிநேர இழுபறிகளற்ற ஹஜ் பயணத்தை பயணிகள் எதிர்பார்க்கலாம். அமைச்சர் ஹலீம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள ஹஜ் சட்ட மூலத்தில் முகவர்களின் நலன்களை விட ஹஜ்ஜாஜிகளின் நலன்களும் எதிர்பார்ப்புகளுமே அடங்க வேண்டும் என நாமும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
Following are some of my suggestions
ReplyDelete1.First time Haj Piligramage should be given very minimum charge.
2. Charges must be high when someone go for haj 2nd and 3rd time and so on
3.charges must be clearly explained.