முஸ்லிம் தலைமைகள் , ஒரே நிலைப்பாட்டில் இயங்குவது சாத்தியமற்றது - அமீரலி
கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமீரலியுடனான நேர்காணல்
கேள்வி: முஸ்லிம் சமூகம் இன்றும் கூட நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இவற்றை தீர்க்க முயற்சிப்பதில்லை. தமிழ் தலைவர்கள் ஓரணியில் இணைந்து செயற்படுபடுவது போன்று ஏன் முஸ்லிம் தலைவர்களால் ஒன்றுபட முடிவதில்லை. தெளிவான விளக்கம் தருவீர்களா?
பதில்: முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்கள் தமிழ் இளைஞர்கள் போன்று ஒரு போதும் ஆயுதமேந்தியவர்களாகச் செயற்படவில்லை. அவர்கள் ஆயுதமேந்தியதன் காரணமாக தமிழ் அரசியல் தலைவர்கள் அடங்கிப் போக வேண்டிய நிலை உருவானது. முஸ்லிம் இளைஞர்கள் அப்படிச் செய்யாதன் காரணமாகவே முஸ்லிம் தலைமைகள் அப்படியானதொரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஆனால் சமூகம் சார்ந்த தற்கால சூழலில் முஸ்லிம் தலைமைகளிடம் முரண்பாட்டை நாம் காண முடியவில்லை. அவசியமான சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போது முஸ்லிம் தலைமைகள் ஒத்த நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதில்லை. ஆனால் முஸ்லிம் கட்சிகளும், தலைமைகளும் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இயங்க வேண்டுமென்பது சாத்தியப்படாத விடயமாகவே தொடரும் என்பதே எனது பார்வையாகும். இருந்தாலும் தற்போதைய அரசியல் நிலையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கு வாரம் சகல முஸ்லிம் அரசியல்வாதிகளையும், யோசிப்பதற்கும், பேசுவதற்குமானதாகவே காணப்படுகின்றது. நல்லாட்சியின் எதிர்க்காலச் செயற்பாடுகள் தான் இதற்கு வழிசமைக்க முடியும்.
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸில் ஒன்று திரண்டிருந்த கிழக்கு முஸ்லிம்கள் இன்று பிரிந்து பிளவுப்பட்டுப் போயுள்ளனர். என்றாலும் தேர்தலொன்று வரும்போது அந்த மக்கள் மரத்தின் நிழலுக்குள்தானே ஒன்றிணைகின்றனர். அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (மரம்) விதையை விதைத்தவர் எமது அன்றைய தலைவர் மர்ஹும் அஷ்ரப் ஆவார். அவரது தியாகம், அன்றைய கடசியின் மதிநுட்பம் அளப்பரியதாகும். அதில் எவரும் குறைகூற முடியாது. ஆனால் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைமைத்துவம் ரவூப் ஹக்கீம் வசம் வந்தது. அன்று அவ்வாறான கால கட்டம் இருந்தது உண்மைதான். இன்று அந்த நிலை மாறிவிட்டது. நாடு பூராவும் நிலைமை மாற்றமடைந்து வருகிறது. முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என்ற அம்பாறை மாவட்டத்தில் கடந்த தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மக்கள் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுத்தரு் நிலைமைக்கு மாற்றம் ஏற்பட்டது. காலவோட்டத்திலிருந்து அது மேலும் விரிவடையும் என்பதே உண்மை. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டுள்ளோம். முஸ்லிம் காங்கிரஸ் தனிக்கட்சியாக இருந்து செய்யத் தவறிய பல விடயங்களை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் அதன் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாதித்துக் கொண்டிருக்கிறார். பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் செய்து கொண்டிருக்கிறார். அந்நிலைக்கு அமைச்சர் ரிஷாதை தள்ளிவிட்டதே முஸ்லிம் காங்கிரஸ்தான் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் முஸ்லிம்களின் உணர்வுகள் முஸ்லிம் காங்கிரஸால் பாராளுமன்றத்திலோ சர்வதேச மட்டத்திலோ கொண்டு செல்லப்படவில்லை. அதனால் ஏற்பட்ட மாற்றமே இது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
கேள்வி: நீங்கள் கூறும் மாற்றமானது எதிர்காலத் தேர்தலின் போது எவ்வாறு அமையும் என்பதை உங்களால் எதிர்வு கூற முடியுமா?
பதில்: நிச்சயமாக கிழக்கில் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் மாற்றமொன்று ஏற்படத்தான் போகிறது. அங்கு வாழும் படித்தவர்கள் புத்திஜீவிகள் முதல் பாமரர்கள் வரை இன்று யோசிக்கத் தொடங்கிவிட்டனர். அதுவும் இரண்டு விதமாக நோக்கக் கூடியதாகவுள்ளது. ஒன்று முஸ்லிம் காங்கிரஸ் மீதான அதன் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்திப் போக்கு மற்றது நாட்டில் முஸ்லிம் சமூகம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள். இன்று இந்த விடயங்களே இந்தப் பிரதேசங்களின் பேச்சாக மாற்றமடைந்துள்ளது. மாறிவருகிறது. எதிர்வரக்கூடிய ஒரு தேர்தலில் கிழக்கு மக்கள் சரியான தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்றே நம்புகிறேன்.
கேள்வி: எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தலில் புதிய முறையையே எதிர்கொள்ளப் போகின்றோம். அப்போது கிழக்கு முஸ்லிம்கள் கட்சி ரீதியில் பிரித்து செயற்படும் போது நாம் பின்னடைவைக் காணும் நிலை ஏற்படாதா?
பதில்: எமது எதிர்பார்ப்பு அதிகாரத்துக்கு நாம்தான் வரவேண்டுமென்பதல்ல. அதே போன்று முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதுமல்ல. எமது சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதில் நாம் மிக உறுதியாகவே இருக்கின்றோம். புதிய தேர்தல் முறை என்பது விசேடமாக முஸ்லிம் சமூகத்தினதும் மலையக சமூகத்தினதும் பிரதிநிதித்துவங்களை குறைக்கச் செய்வது என்ற விடயமாகவே நாம் பார்க்கின்றோம். அதே போன்று சிறிய கட்சிகளுடைய பிரதிநிதித்துவமும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இல்லாமல் போகும் ஒரு நிலை ஏற்படலாம். இவ்வாறான சூழ்நிலையிலேயே முஸ்லிம், மலையக, சிறிய கட்சிகள் அனைத்தும் தமது கடுமையான ஆட்சேபனையை முன்வைத்து வருகின்றன. அவ்வாறான திணிப்பை நல்லாட்சி அரசு பலவந்தமாக இலகுவாக திணித்து சாதித்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.
கேள்வி: இதன் பிரகாரம் நல்லாட்சி அரசிடமிருந்து எவ்வாறான அணுகுமுறையை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பரவலாக வாழ்த்து வருவதன் காரணமாக எமது விகிதாசாரத்துக்கு எற்ப எமது தலைவர் (பிரதிநிதித்துவம்) மாகாண, உள்ளூராட்சிச் சபைகளிலும், பாராளுமன்றத்திலும் இருக்க வேண்டும். அது சாத்தியமானதாகும். இதனடிப்படையில் கிழக்கு தவிர்த்த ஏனைய பகுதிகளில் முஸ்லிம் வாழும் பிரதேசங்களில் உரிய பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பொறிமுறை வேண்டும். இந்த விடயத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதற் தடவையாக அனுராதபுரம், குருணாகல், புத்தளம் அகில மாவட்டங்களில் முயற்சித்து அனுராதபுரத்தில் மாத்திரம் அதனை நிலைநாட்டிக் கொள்ளக் கிடைத்திருக்கின்றது. எமது மக்கள் எம்மோடு இணைந்து இருப்பார்களானால் நம்பிக்கை வைப்பார்களானால் எல்லாப் பிரதேசங்களிலும் எமது இந்தப் பணியை விஸ்தரித்து அவர்களுக்கொரு குரல் கொடுக்கும் பிரதிநிதிகளை பிரதேச மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
கேள்வி: முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலைமை, அரசியல் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: தற்போதைய காலச்சூழல் முஸ்லிம் சமூகத்தை ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளிவிட்டது என்பதை வெளிப்படையாகக் காண முடிகிறது. அன்று மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இருந்த அதிருப்தி, அச்ச உணர்வுகள் இன்று நல்லாட்சி அரசுக் காலத்தில் அதிகாரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நாங்கள் என்னதான் சொன்னாலும் மூடி மறைக்க முயற்சித்தாலும் முஸ்லிம்கள் மீதான அழுத்தங்கள் கூடிக்கொண்டே போகிறது. இதுதான் வாஸ்தவமானது. இந்தச் சூழ்நிலைக்கு மஹிந்தவா, மைத்திரிபால சிறிசேனவா, ரணில் விக்கிரமசிங்கவா என்கின்ற விடயத்துக்கப்பால் இவற்றையெல்லாம் இல்லாமல் செய்வோம் என்ற கோஷத்துடன் தான் நல்லாட்சி அரசு அதிகாரத்துக்கு வந்தது. அன்று மஹிந்த ராஜபக்ச என்ற ஒருவரைத் தான் முஸ்லிம் சமூகம் பிழையாகக் கண்டது. இன்றைய ஆட்சியல் பலரைக் காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் ஒவ்வொரு வாரமும் அமைச்சரவைக் கூட்டங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் பிரஸ்தாபித்த வண்ணமே உள்ளனர். தனித்தனி சந்திப்புகளும் இடம்பெற்று வருகின்றன. சர்ச்சைகளும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
அரசு தரப்புக்குள் இருக்கும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற இனத்துவேசமான போக்குடையவர்களும் அதே நேரம் முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சமூகங்களோடு ஒத்தி சைவாகச் செயற்படக் கூடிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க போன்ற நல்லெண்ணத்தைப் பேணுகின்ற ஒருசாராரும் இருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே நாம் காய்நகர்த்திச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலைமைகள் குறித்து சிங்களத் தலைவர்கள் அதிகம் பேச வேண்டுமென்று முஸ்லிம் தலைமைகள் சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
நேர்காணல் எம். ஏ. எம். நிலாம்
Everyone know that you all politicians are not for Muslim Community...
ReplyDeletethis is why you are telling this statement...Welldone..Keep it up
Samooogam epdittaan seeralinchaalum ungalukku ennappa....
Thampi orama poi vilayadunga
ReplyDelete