முஸ்லிம்கள் அச்சமடைந்துவிட்டனர் - ராஜித
இலங்கையை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக எவ்விதமான புலனாய்வு அறிக்கையும் பாதுகாப்புப் பேரவையினால் வெளியிடப்படவில்லை. இது முற்றிலும் தவறான தகவலாகும் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். அதன்படி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்த தகவ லானது அவருடைய தனிப்பட்டதகவலாகும். அது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இந்த விடயத்தில் நாட்டில் முஸ்லிம் மக்கள் அச்சமடைந்து விட்டனர். அவர்களை தெளிவுபடுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். அதாவது முஸ்லிம் மக்கள் மிகவும் மிதவாத சிந்தனைகளைக்கொண்ட மக்களாவர். அவர்கள் ஒருபோதும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் அங்கம் வகிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தானது அரசாங்கத்தின் கருத்தல்ல. அது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவ்வாறு இலங்கையை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக எவ்விதமான புலனாய்வு அறிக்கையும் பாதுகாப்பு பேரவையினால் வெ ளியிடப்படவில்லை.
இது முற்றிலும் தவறான தகவலாகும் என்பதை பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டவன் என்ற அடிப்படையில் பொறுப்புடன் கூறுகின்றேன். அதன்படி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்த கருத்தானது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேடமாக கவனம் செலுத்தி பாதுகாப்புத் தரப்பிடம் தவல்களைப் பெற்றார். அதன்படி அவ்வாறு எந்தவொரு இலங்கை உறுப்பினரும் ஐ.எஸ். அமைப்பில் இல்லை என்பதை பாதுகாப்புப் பிரிவும் உளவுப்பிரிவும் உறுதி செய்துள்ளது.
ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து சிலர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக கூறப்பட்டது. ஆனால் அது இலங்கையை விட்டுச் சென்ற ஒரு சிலராலேயே முன்னெடுக்கப்பட்டதாகவே கூறப்பட்டது. எவ்வாறெனினும் தற்போது எவரும் இந்த அமைப்பில் இலங்கையிலிருந்து சென்று இணைந்துகொள்ளவில்லை.
இந்த விடயத்தில் நாட்டில் முஸ்லிம் மக்கள் அச்சமடைந்துவிட்டனர். அவர்களை தெளிவுபடுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். அதாவது முஸ்லிம் மக்கள் மிகவும் நவீன சிந்தனைகளைக் கொண்ட மக்களாவர். அவர்கள் ஒருபோதும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க மாட்டார்கள்.
முஸ்லிம் இளைஞர்கள் ஏதாவது கடும்போக்குவாதமாக செயற்பட்டால் முஸ்லிம் பெரியோர்கள் எங்களை அழைத்து விடயத்தை கூறிவிடுவார்கள். காரணம் அவ்வாறான சிறுசிறு விடயங்களால் பாதிப்பு பெரிதாகும் என்று அவர்களுக்குத் தெரியும். அதுமட்டுமன்றி நானும் முஸ்லிம் மக்களுடன் நெருங்கிப் பழகுகின்றேன். கிழக்கு மாகாணம், கொழும்பு, பேருவளை, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முஸ்லிம் மக்களை எனக்கு நன்றாகத் தெரியும்.
கேள்வி:- அப்படியாயின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஏன் இவ்வாறானதொரு தகவலை வெளியிட்டார்.?
பதில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தனக்கு கிடைத்த தகவலை கூறியிருக்கின்றார் போல் தெரிகின்றது. ஆனால் அது அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ தகவல் அல்ல. உத்தியோகப்பூர்வ தகவலையே நான் இப்போது உங்களுக்கு கூறுகின்றேன். இந்த விடயத்தை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
கேள்வி: ஒருசில வெளிநாட்டு முஸ்லிம்கள் இலங்கையில் அரபு மொழியில் தீவிரவாத பிரசாரம் செய்வதாகவும் அமைச்சர் கூறியிருந்தார். இது தொடர்பில்
பதில்:- அந்த விடயத்தையும் நாங்கள் பாதுகாப்புத் தரப்பினரைக் கொண்டு தேடிப்பார்த்தோம். அவர்கள் அவ்வாறு எதுவும் தீவிரவாதப் பிரசாரம் செய்யவில்லை. தமது மத விடயங்களை அரபுமொழியில் முன்னெடுக்கின்றனர். இந்த இடத்தில் அரபுமொழியில் பேசுவது மட்டுமே புதிய விடயமாகும். மாறாக வேறு ஒன்றும் இல்லை.
இந்தவிடயத்தில் ஜனாதிபதியும் நானும் விசேடமாக கவனம் எடுத்தோம். பாதுகாப்பு தரப்பினருடனும் உளவுத்தரப்பினருடனும் கலந்துரையாடி விடயத்தை தெளிவுபடுத்திக் கொண்டோம். அந்தவகையில் அவ்வாறு எவரும் ஐ.எஸ். அமைப்பில் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.
கேள்வி:- அப்படியாயின் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியது பொய்யா?
பதில்: அது எனக்குத் தெரியாது. ஆனால் ஐ.எஸ். அமைப்பு இலங்கையிலிருந்து எவரும் இல்லை என்பது உறுதியாகும். இது தொடர்பில் நான் விஜயதாஸ ராஜபக்ஷவுடனும் பேச்சு நடத்தினேன். தனக்கு கிடைத்த தகவல்களை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
கேள்வி: நீதி அமைச்சரின் இந்தக் கூற்றினால் நாட்டின் முஸ்லிம் சமூகம் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டதே?
பதில்: ஆம் முஸ்லிம் சமூகம் மத்தியில் ஒரு சலசலப்பும் அச்ச நிலைமையும் ஏற்பட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புக்கள் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கோரியுள்ளன. முஸ்லிம் மக்கள் எந்தவகையிலும் அச்சமடையத் தேவையில்லை. நாங்கள் தேவையான பாதுகாப்பை வழங்குவோம். எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு இன்மையாக உங்களை உணரவேண்டாம்.
கேள்வி: முஸ்லிம் அமைப்பை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரே?
பதில்: அவர் முன்னைய ஆட்சியில் உளவாளியாகவும் கோத்தபாய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவாகவும் செயற்பட்டமை எமக்குத் தெரியும்.
இந்த இடத்தில் ஒருவிதமான சதி இடம்பெறுவதை நாங்கள் உணருகின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதமான முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களித்தனர். எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அந்த மக்களை வாக்களிப்பிலிருந்து பகிஷ்கரிப்பு செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
அதேபோன்று வடக்கில் ஆவா குழுவை நிறுவி அங்கும் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதன்மூலம் முஸ்லிம் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் மூலம் வெற்றிபெறுவதற்கு ராஜபக்ஷ தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
கேள்வி:- அப்படியாயின் அந்த முயற்சிக்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதுணையாக செயற்படுகின்றாரா?
பதில்: கருத்து வெளியிட விரும்பவில்லை
கேள்வி: கோத்தபாய ராஜபக்ஷவிடம் தகவல் பெற்றுத்தான் நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதாக கூறப்படுகின்றதே?
பதில்: உண்மை என்றால் மகிழ்ச்சியடையலாம்.
கேள்வி: நீங்கள் முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படுபவர் என்பதால் இவ்வாறு கூறுகிறீர்களா?
பதில்: பாதுகாப்பு பேரவையில் வெளிப்படுத்தப்பட்ட உண்மையான தகவல்களை நான் உங்களுக்கு கூறுகின்றேன். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும்.
Thawheed Jamaath have to justify their CID work about Muslims with Koththabaaya. (It does not mean that they should quote evidence from Quran or Hadeeths)
ReplyDeleteமாஷாஅள்ளாஹ்,
ReplyDeleteஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையிலும் முஸ்லிம்களை சரியாகப் புரிந்து கொண்டவர் என்ற வகையிலும் நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
ஆனால் இது அரசியலாகவும் வாக்குவங்கியைப் பாதுகாப்பதற்காகவும் மட்டுமே என இருந்துவிடப்கூடாது எனப் பிரார்த்திக்குன்றேன்.