இனவாதத்திற்கு எதிராக, சட்டத்தை கடுமையாக செயற்படுத்துக - சந்திரிக்கா
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதனூடாக சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்திருக்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட இனமுறுகல் செயற்பாடுகள் குறித்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக இரத்தம் சிந்தி ஏற்பட்ட அழிவுகளுக்கு பின்னர் நாட்டை நல்லிணக்கத்தை நோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு இவ்வாறான செயற்பாடுகள் சவாலாக அமைந்துள்ளது என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரதுங்க விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மூலம் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தை முதன் முதலில் வெளிக்காட்டியிருக்கும் தற்போதைய அரசாங்கம், இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு முன்புள்ள காலத்தில் அரச ஆட்சியாளர்களினால் இனங்களுக்கிடையில் குரோதம் மற்றும் இனவாதத்துக்கான ஆதரவு வழங்கப்பட்டது. இவ்வாறானவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு பல சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மக்கள் சார்பான செயல்திறன்மிக்க நேர்மையான ஆட்சி முறையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் அவசியமாகும்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பற்றி தங்களது பலமான அதிருப்தியைத் தெரிவித்திருப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது எனத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் சம்பந்தமாக தாமதிக்காது சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெறுப்பு மற்றும் குரோத செயற்பாடுகளுக்காக மக்களை தூண்டுகின்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற மிகவும் முற்போக்கான செயற்பாடுகளை வரவேற்கின்றோம். குறுகிய இனவாத கருத்துக்களைப் பரப்புவதற்கு முயற்சித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையையும் வரவேற்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்களின் சமூக, அரசியல் மத பின்புலங்களை கவனத்தில் கொள்ளாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெறுக்கத்தக்க கருத்துப் பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகளும் சாட்சியங்களும் அதிகாரிகளிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், அவை தொடர்பில் புலனாய்வுக்காக சட்ட நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் இருப்பதை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதாகவும் அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment