சீனி கொள்கலனுக்குள் கொக்கைன் கடத்தலா..? சுங்கப் பிரிவால் சோதனை
(எம்.எப்.எம்.பஸீர்)
பிரேசிலில் இருந்து நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் சீனி கொள்கலனுக்குள் மறைத்து வைத்து கொக்கைன் கடத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து சுமார் 50 அதிகமான சீனி கொள்கலன்களை சுங்கப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்து தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
கொக்கைன் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தீவிர சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பூரணமாக சோதனைக்கு உட்படுத்தப்படாது எந்தவொரு சீனி கொள்கலனும் சுங்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படமாட்டது என சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹந்தவ வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலன்களுக்குள் வைத்து கொக்கைன் கடத்தப்பட்ட மூன்று சம்பவங்கள் அண்மையில் முறியடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சீனி கொள்கலன்களை முழுமையான சோதனையின்றி வெளியே அனுப்புவதில்லை என்ற முடிவுக்கு சுங்கப் பிரிவினர் வந்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் முன்னிலையாகும் பட்சத்தில் அந்த கொள்கலன்கள் விரைவாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களிடம் ஒப்படிக்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
கடந்தவாரம் சுங்கப் பிரிவினரால் விடுவிக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்ததாக கூரப்படும் 45 கோடி ரூபா வரையிலான பெறுமதி கொண்ட 31.844 கிலோ கொக்கைன் போதைப் பொருளினை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனியார் களஞ்சியம் ஒன்றிலிருந்து மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment