முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிக்காரர்கள், முச்சந்திக்கு வந்து திறந்த மேனியுடன் ஆடுகின்றனர் - அஸ்வர்
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இலங்கை முஸ்லிம்கள் இல்லை என அரசாங்கம் தெளிவாகியிருக்க அரசின் பங்காளிக் கட்சியான ஹெல உருமய முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறுவது இதுவரை பார்வையாளர்கள் கூடத்திலிருந்து ஆடியவர்கள் இப்போது மைதானத்தில் வந்து வெட்ட வெளிச்சமாக ஆட ஆரம்பித்துள்ளனர் என்பதனையே காட்டுகின்றது என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உருமயவின் ஊடகச் செயலாளர் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த வர்ணசிங்க ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பில் முஸ்லிம்களும் இருப்பதாக தெரிவித்திருந்த கருத்து குறித்து விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி மேலும் குறிப்பிட்டு இருப்பதாவது,
இவ்வளவு நாளும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்கு எதிராக வகுக்கப்பட்ட சூழ்ச்சியின் சதிகாரர்கள் யார் என்று தேடும் வேளையில் அது ஹெல உருமய என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. அதன் செயலாளர் நிஷாந்த, ஐ.எஸ்.ஐ.எஸ் படையைச் சேர்ந்தவர்கள் எமது நாட்டில் இருக்கிறார்கள் என்று மிகவும் அழுத்தமாகக் கூறியுள்ளார். எனவே இப்போது இந்த சூழ்ச்சிக்காரர்கள் முச்சந்திக்கு வந்து திறந்த மேனியுடன் தமது ஆட்டத்தை, அட்டகாசத்தைப் புரிவதை இப்போது மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் ஏனையவர்களும் இலங்கையில் ஐ. எஸ். ஐ. எஸ் படையில் ஒருவரும் இல்லை என்பதை தெளிவாகக் கூறிய பிறகு, எப்படி இலங்கையர்கள் இந்த சண்டாளப் படையில் சேர்ந்துள்ளார்கள் என தண்டவாளம் பேசியுள்ளார். ஹெல உருமயவின் தலைவர்தான் இன்று அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக. இவர் ஷரியாவுக்கு விரோதமாக நூலை எழுதியுள்ளார் என்பதை நான் அடிக்கடி கூறி வந்தேன். அந்த நூலை சென்ற தேர்தலின் போது பகிரங்கமாக ஒரு கூட்டத்தில் எரித்தேன். ஆனால் அவர்கள் இதற்கு சம்பந்தமில்லை என பிறகு கூறிவிட்டு முஸ்லிம்களுடைய ஆதரவைப் பெறுவதற்கு பதுங்கிப் பதுங்கி ஆட்களைத் தேடிக் கொண்டு போகின்றார்கள். அவரும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும்தான் இந்த ஐ. எஸ். ஐ. எஸ் படையில் இலங்கை முஸ்லிம்கள், முஸ்லிம் வாலிபர்கள் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அன்று பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த கோதாபய ராஜபக்ஷ ஐ.எஸ்.ஐ. எஸ் படையில் முஸ்லிம் வாலிபர்கள் யாரும் இல்லை என்று அடித்துக் கூறியவர்.
எனவே இப்பொழுது உள்ள நிலையில் அரசாங்க கொள்கைக்கும் அரசாங்க பகிரங்க அறிவுறுத்தலுக்கும் விரோதமாக சிந்தனையிலிருந்து செயற்பட்டு வருகின்ற சம்பிக ரணவகவை அப்பதவியிலிருந்து உடன் நீக்க வேண்டும் ஏனெனில் அவர்தான் முதன்முதலாக பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர்.
எனவே இவரை அரசாங்கத்தில் வைத்துக் கொண்டு சம தர்மம், நல்லாட்சி, முஸ்லிம்களுடன் நல்லுறவு என்பதை பற்றி பிரதமருடன் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எந்த விதமான அருகதையும் கிடையாது. எனவே அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் இப்போதுதான் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அச்சம் தீரும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
Post a Comment