முஸ்லிம் இளைஞன் படுகொலை, தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் கைது
அங்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்ஹின்ன - பெபிலகொல்ல பள்ளிவாசலுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் போது மேற்படி சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை வேளையில் ஹோமாகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெலி ஓய, கிரி இப்பன்வெவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பேபில களு ஆரச்சி எனும் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதான நபரிடம் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 30 வயதுடைய மஹியாவ பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் அலி மற்றும் கடுவலை – ரணால பகுதியைச் சேர்ந்த இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 23 வயதான கனத்த கமகே இந்துனில் வஜிர குமார ஆகியோரிடம் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகள் ஊடாக கொலைக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ள நிலையிலேயே பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் கல்ஹின்ன -பெபிலகொல்ல பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை அருகே பிரதான பாதையை அண்மித்து இளைஞர்கள் இருவர் உரையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பிரதான பாதை வழியே 301 –- 2218 எனும் இலக்கத்தைக் கொண்ட சிவப்பு நிற கார் ஒன்று வந்துள்ளது. இக்காரானது குறித்த இளைஞர்கள் நின்றிருந்த இடத்தைக் கடந்து சென்று, மீண்டும் பின்னோக்கி வந்துள்ளதுடன் அதன் போது அவ்விளைஞர்கள் மீது காருக்குள் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து அவ்விளைஞர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் பொதுமக்களினால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கண்டி வீதி, கல்ஹின்ன எனும் முகவரியைச் சேர்ந்த 23 வயதுடைய மொஹம்மட் ராஸிக் மொஹம்மட் மூசித் எனும் இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்தவர் 21 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்குத் தெரிவித்தார்.
காயமடைந்தவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் கொலை செய்வதற்காக பயணித்த 301 –- 2218 எனும் இலக்கத்தைக் கொண்ட சிவப்பு நிற காரானது கண்டி, பூஜாபிட்டிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட போதும் அந்தக் காரானது கொழும்பு,- கந்தானை பகுதியில் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது என்பது விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காரில் கொழும்பிலிருந்து இருவர் பயணித்துள்ளதுடன், கண்டி பகுதிக்குள் வைத்து முதலில் கைது செய்யப்பட்ட 30 வயதான மொஹம்மட் அலி எனும் சந்தேக நபர் காரில் ஏறியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரில் பயணித்த ஏனைய இருவரில் ஒருவரான ரணால பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான இந்துனில் வஜிர குமாரவுடன் சேர்ந்து கொழும்பில் இருந்து பயணித்ததாகக் கூறப்படும் நபரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
மொஹம்மட் அலி எனும் சந்தேக நபர் வழிகாட்டியாக இக்கொலைச் சம்பவம் தொடர்பில் செயற்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ள விசாரணையாளர்கள் அது தொடர்பில் அவர் 50 ஆயிரம் ரூபா வரையில் பணம் பெற்றுள்ளதாகவும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நிலவிய தனிப்பட்ட விவகாரம் ஒன்றினை மையப்படுத்தி வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவர் வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பழி தீர்க்க இந்தக் கொலை புரியப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை உறுதி செய்ய போதிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழான குழுவினரும் முன்னெடுத்துள்ளனர். MFM.Fazeer
Post a Comment