முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை, கட்டுப்படுத்த தீவிர கவனம்
முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மீளவும் தலையெடுத்துள்ள இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் இக் குழு அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றையும் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது.
இதேவேளை பெளத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை உள்ளடக்கி மற்றுமொரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இக் குழு தத்தமது சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அறிக்கை ஒன்றை தயாரித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
இனங்களுக்கும், சமயங்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகளையும், சந்தேகங்களையும் களைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் உறுப்பினரான முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் மதத்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
அண்மைக் காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த முஸ்லிம் சமூகத்துக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான விபரங்களைத் திரட்டுவதற்காகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் மீதான வெறுப்புப் பேச்சுக்கள், முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம், அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் தாக்குதல்கள், பெப்லியானவில் பெஷன்பக் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்து, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மையினத்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஆலோசிக்கப்படுமெனவும் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிறிஸ்தவ சமயவிவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, மற்றும் அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆகியோருடன் ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார். ARA.Fareel
Please take useful action not only forming the commissions
ReplyDelete