Header Ads



“பலஸ்தீன்” என்றால், ஞாபகத்திற்கு வருபவர் “யாஸிர் அரபாத்”

-அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால்-

பலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாக பிறந்து வளர்ந்து நடுவில் ஒரு தலைவனைப் பெற்றது. அத்தலைவர்தான் யாஸிர் அரபாத் ஆவார். யாஸிர் அரபாத் அவர்களின் இயற்பெயர் முஹம்மது யாஸிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரபாத் அல்குத்வா அல்-ஹுஸைனி ஆகும். 
பலஸ்தீன பெற்றோர்களான  அப்துர் ரவூப் அரபாத் அல்குத்வா அல்-ஹுஸைனி, ஜாஹ்வா அபுல் ஸவுத் ஆகியோருக்கு ஏழு குழந்தைகளில் இரண்டாவது இளம் மகனாக யாஸிர் அரபாத் அவர்கள் 1929 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி எகிப்தில் கெய்ரோவில் பிறந்தார். யாஸிர் அரபாத் அவர்களின் தந்தை தனது பரம்பரை குடும்ப நிலங்களின் உரிமையை பெறுவதற்காக 25 வருடங்களாக எகிப்திய நீதிமன்றங்களில் வழக்காடி தோல்வியடைந்தார். அதன் பின்னர் தந்தையார் சாகினி மாவட்டத்தில் ஒரு துணி வியாபாரத்தில் பணியாற்றினார். யாஸிர் அரபாத் அவர்களுக்கு நான்கு வயதாகவிருந்தபோது அவரின் தாய் சிறுநீரக நோயால் இறந்தார். 

யாஸிர் அரபாத் அவர்கள் 1944 இல் கிங்-புவாட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் யூதர்கள் பற்றிய விடயங்களைத் தெரிந்து கொண்டார். மேலும் யூத மற்றும் ஸியோனிஸம் பற்றி நன்றாகவே புரிந்து கொண்டார். யாஸிர் அரபாத் அவர்கள் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போதே 1948 இல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் யுத்தத்தின்போது கிங்-புவாட் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி அரபுப் படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக துணிவுடன் போரிட்டார்.  யாஸிர் அரபாத் அவர்கள் கிங்-புவாட் பல்கலைக்கழகத்தில் 1950 இல் சிவில் பொறியியலாளர் பட்டம் பெற்றார்.  

யாஸிர் அரபாத் அவர்கள் சிவில் பொறியியலாளர் பட்டம் பெற்றதும், 1951 இல் குவைத்தில் பணியாற்றினார். யாஸிர் அரபாத் அவர்கள் 1955 இல் எகிப்தில் கமால் அப்துல் நஸாரின் ஆட்சியில் ஒரு தடவை கைது செய்யப்பட்டும் இருக்கிறார். குவைத்தில் யாஸிர் அரபாத் அவர்கள் அபுஜிஹாத் என்பவருடன் இணைந்து “பத்தா” அமைப்பை 1957 இல் நிறுவி அதனூடாக பலஸ்தீன அரசியல் போராட்டத்தில் தீர்க்கமாக தனது பலஸ்தீன போராட்டத்தை ஆரம்பித்தார்.  பலஸ்தீனம் என்பது மிகவும் உயர்வான கலாசாரம் கொண்ட அருள்பாலிக்கப்பட்ட பூமியாகும். இப்பூமியில் அதிகமான நபிமார்கள், ரஸூல்மார்கள் பிறந்து வளர்ந்து இறப்பை அடைந்துள்ளனர். அந்தவகையில் பலஸ்தீனம் சிறப்புப் பெற்றது. பலஸ்தீனத்தில் அமைந்த “பைத்துல் முகத்தஸ்” முக்கிய சிறப்புப் பெற்றது. காரணம் நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. முஸ்லிம்களுக்கு தொழுகை கடமையாக்கப்பட்டதிலிருந்து 16 மாதங்கள் “பைத்துல் முகத்தஸ் மஸ்ஜித்” நோக்கியே தொழுது வந்தனர். முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாக “பைத்துல் முகத்தஸ் மஸ்ஜித்” சிறப்புப் பெறுகிறது. கவலை என்னவென்றால் இன்றும்கூட பைத்துல் முகத்தஸ் இஸ்ரேலியர்களின் ஆதிக்கத்திலேயே உள்ளது. உலகில் 65 முஸ்லிம் நாடுகள், 160 கோடிக்கு மேல் முஸ்லிம்கள் இருந்தும் புனித பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதை மீட்டெடுக்க முடியாத நிலையை எண்ணி வெட்கப்பட வேண்டியுள்ளது. 

யாஸிர் அரபாத் அவர்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால வாழ்வில், பலஸ்தீன போராட்டத்தை தன்னுடைய வாழ்க்கையாக மாற்றியிருந்தார். பலஸ்தீன் என்றால் யாஸிர் அரபாத் என்றும் யாஸிர் அரபாத் என்றால் பலஸ்தீன் என்றுமிருந்தது. போராட்ட காலத்தில் யாஸிர் அரபாத் அவர்களை பலஸ்தீனர்களின் “அபு அம்மார்” என மரியாதையுடன் அழைத்தனர்.  யாஸிர் அரபாத் அவர்கள் “பத்தா” அமைப்பின் மூலம் முழுமையாக ஆளுமை, தலைமைத்துவம், வழிகாட்டல் என்பவற்றினூடாக பலஸ்தீன விடுதலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பத்தா எனும் சிறிய அமைப்பை நிறுவிய யாஸிர் அரபாத் அவர்கள் அதனூடாக ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்திற்குள் இருந்த பல்வேறு கருத்துக்கள் கொண்ட  அமைப்புக்களை இணைத்து பலஸ்தீன விடுதலை இயக்கத்தை (PLO) உருவாக்கினார். யாஸிர் அரபாத் அவர்கள் 1969 இல் பலஸ்தீனத்தின் செயலதிபராக, தலைவராக பொறுப்பேற்றார். யாஸிர் அரபாத் அவர்கள் உலக அரங்கில் முக்கிய விடுதலை போராட்ட வீரர்களுக்கான இலட்சிய உருவாக தோன்றினார். யாஸிர் அரபாத் அவர்கள் 1960, 1970 களில் பலஸ்தீன போராட்டத்தின் காவிய நாயகனாக போற்றப்பட்டார். 

யாஸிர் அரபாத் அவர்கள் 1980 களில் சவுதி அரேபியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்று பலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார்.  யாஸிர் அரபாத் அவர்கள் 1990 இல் தனது 61 ஆவது வயதில் தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய 27 வயதுடைய  கிறிஸ்தவ பெண்ணான சுஹா தாவில் என்ற பெண்ணை திருமணம் செய்தார். யாஸிர் அரபாத்- சுஹா தாவில் தம்பதியினருக்கு 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஸஹ்வா அரபாத் எனும் பெண் குழந்தை பிறந்தது.  யாஸிர் அரபாத் அவர்கள் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்களாக நிலவிய மோதலுக்கு முடிவு கட்ட முயற்சி செய்ததில் முக்கியமானவை 1991 இல் மாட்ரிட் மாநாடு, 1993 இல் ஒஸ்லோ உடன்பாடு, 2000 இல் காம்ப் டேவிட் உச்சி மாநாடு ஆகும். யாஸிர் அரபாத் அவர்கள் 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார். 

யாஸிர் அரபாத் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அன்று திடீரென நோயுற்றதால் கூட்டத்தில் வாந்தி எடுத்ததை தொடர்ந்து ஜோர்தான், துனிஸியா, எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டின் பெர்ஸி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி கோமா நிலைக்கு சென்று 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தனது 75 ஆவது வயதில் இறந்தார்.  பிரான்ஸில் காலமாகிய யாஸிர் அரபாத் அவர்களை பிரான்ஸ் ஜனாதிபதி சொக்சிராக், “தைரியத்தின் மனிதன்” என பாராட்டினார். யாஸிர் அரபாத் அவர்களின் உடல் ரமல்லாவில் தற்காலிகமாக நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால், இஸ்ரேல் அரசு அனுமதிக்காததால் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முசொலியத்தில் ஜனாதிபதி தலைமையகத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டுள்ளது.     

யாஸிர் அரபாத் அவர்கள் இறந்தபோது அவர் உடல்நலக் குறைவால்தான் இறந்தார் என கருதப்பட்டது. ஆனால், யாஸிர் அரபாத் அவர்களது மரணத்தில் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட அவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் அவரது உடைகள் உட்பட மரணத்தின்போது அவரிடமிருந்த பொருட்கள் 2012 இல் சுவிட்ஸர்லாந்து நாட்டு பரிசோதனைக்கூடம் ஒன்றில் இரசாயனப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன.  அவருக்கு பொலோனியம் என்ற கதிர்வீச்சு கொண்ட நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து லாசேன் பல்கலைக்கழகத்தின் கதிர் வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் போஸட் தெரிவிக்கையில் யாஸிர் அரபாத் அவர்களின் உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் குறிப்பிடத்தக்க அளவு பொலோனியம் இருந்தது என்றார். 

பொலோனியம் என்பது கதிரியக்க மூலகம் ஆகும். ஒரு தூசு அளவுக்கு உடலில் இருந்தாலே சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு சில வாரங்களில் உயிர் பிரிந்து விடும். இந்த கதிரியக்க மூலகத்தை சாதாரண இடத்தில் பெற முடியாது. அணு உலைகளில்தான் பிரித்தெடுக்க முடியும். எனவே, பொலோனியத்தை இஸ்ரேல்தான் யாஸிர் அரபாத் அவர்களின் உணவில் கலந்திருக்க வேண்டும் என்று பலஸ்தீனர்கள் கருதுகின்றனர்.  யாஸிர் அரபாத் அவர்கள் இவ்வுலகை விட்டு செல்லும்போது அவரது இலட்சியம் நிறைவேறியுள்ளதா என்று நோக்கும்போது கவலைதான் மிஞ்சுகின்றது. எனவே, யாஸிர் அரபாத் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற அடுத்த தலைமுறை தயாராக வேண்டும்.

No comments

Powered by Blogger.