'முஸ்லிம்கள் சாமர்த்தியமாக, செயல்பட வேண்டிய காலமிது'
-பாரூக் பஸ்மில்கான் -
இலங்கை சூழல் தற்போது முஸ்லிம்களாகிய எமக்கு பேராபத்தை தரக் கூடியதாகவே உள்ளது என்பது சர்வ நிச்சயம். இந்த சந்தர்ப்பத்தில் நாமும் நமது தலைமைகளும் சற்று நிதானித்து சாமர்த்தியமாகவே காய் நகர்த்த வேண்டியுள்ளது.
இதைவிடுத்து நாம் கூச்சல் போட்டுக் கொண்டும் கூக்குரல் விடுத்துக் கொண்டும் இருப்பதானது நமது கைகளினாலேயே நமது கண்களைக் குத்திக் கொள்வதற்கு ஒப்பானது.
கடந்த சில தினங்களாக நாட்டில் நடைபெறும் சம்பவங்கள், அசம்பாவிதங்கள் முஸ்லிம்களைச் சீண்டிப்பார்ப்பதாகவும் அவர்களை கலவர நோக்கில் இழுத்தெடுப்புச் செய்வதாகவும் அமைந்துள்ளது. சில திட்டமிட்ட பௌத்த அமைப்புகள் இந்த பணியை கனக்கச்சிதமாகவே நிறைவேற்றி வருகின்றன.
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பௌத்தமத இனவாத குழுக்கள் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளன. இவர்களின் பின்னால் சில நச்சுப் பாம்புகளும் (முன்னாள் இனவாதிகள்) சில நல்ல பாம்புகளும் (இன்னாள் புதிய இனவாதிகளும்) கைகோர்த்துள்ளனர். முஸ்லிம் சமூகத்தை நோக்கி இனவாத மதவாத கருத்துக்களைக் கட்டவிழ்த்து விடுவதினூடாக பாரியதொரு கலவரத்தை உண்டு பண்ணி பௌத்த மக்களை ஒன்று திரட்டும் செயற்றிட்டத்தை செய்து வருகின்றனர்.
யாழப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் துப்பாக்கிச் சூடு, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் ஆக்ரோசமான கருத்துக்கள், பெபிலியான பெசன் பக் விபத்து, டான் பிரசாத்தின் இனவாதப் பேச்சுக்கள், என்பன அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறினாலும் இவையனைத்தும் ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி நிரலுக்கான திகிடுதத்தங்களாகவே இருப்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.
தற்போது நாட்டில் இரண்டு பிரதான அரசியல் சக்திகளுக்கிடையிலும் சிங்கள பௌத்த அமைப்புகளுக்கிடையிலும் தோன்றியிருக்கும் பௌத்த உணர்வெழுச்சிப் போராட்டம், யாருக்கு அதிக பலம் என்ற கோதாவில் ஒன்றை ஒன்று விழுங்கி விடும் போலுள்ளது. எனவே வரும் நாட்களில் இன-மத வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயற்பாடுகள் உக்கிரமடைய வாய்ப்புள்ளது.
கடந்த 2014, 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியினைப் போன்று சிறுபான்மையினர் சந்தித்த இக்கட்டான நிலையினை விட தற்போதைய சூழ்நிலையை படுபயங்கரமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
யார் எதிரி? யார் நண்பன்? என்று அன்றைய ஆட்சியில் ஓரளவேனும் அளந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது. ஆனால் தற்போது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, பௌத்த மதத்தினை திருப்திப் படுத்தும் நோக்கிலான ஆளும் அரசாங்கமும் இனவாதத்தை முழு வீச்சில் முடுக்கி விட்டு ஆட்சியை எட்டிப் பிடிக்கும் நோக்கிலான இன்னொரு தரப்பும் இரு முனைப் போட்டியில் இறங்கியுள்ளன.
இவ்வேளையில் நாம் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டிருப்பதானது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. இனவாதத்தை தூசுதட்டி சூடேற்றுவதினூடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் சக்திகளை தவிடுபொடியாக்க வேண்டுமெனில் இனவாதத்தை கக்குகின்ற பௌத்த அமைப்புகளை கண்டும் காணாமல் விடுவதும் எதனைச் செய்தாலும் இந்த அரசு சட்ட நடவடிக்கை எடுத்தால் அது இனவாதிகளை நோக்காது பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்று பௌத்த மக்கள் ஆட்சிக்கு ஆப்பாக மாறிவிடுவார்கள் என்ற நோக்கமுமே அரசாங்கம் இவ்விடயத்தில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருவதற்கான காரணங்களாகும்.
இந்த இனவாத அலைவரிசையானது அரசியல் சூழலுக்கு ஏற்ப மேலும் கீழுமாக கூடிக்குறைகின்றதொழிய அதன் பண்பில் மாற்றம் நிகழ்வதற்கான சமிக்ஞைகள் தென்படவில்லை. இதனால் முஸ்லிம்கள் வீதிகளிலும், பொது இடங்களிலும் அதில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன், இதில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன் என்று சிங்கள மக்களின் சீற்றத்தை தூண்டாமல் இருப்பது இப்போதைக்கு நல்லது. இங்கே அடங்கி ஒடுங்கி போக வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆமை வேகத்தில் நகர்ந்து எமது இலக்கை எட்டிப் பிடிக்க வேண்டும் என்கிறோம்.
எமது அரசியல் தலைமைகள் அசம்பாவிதம், வன்முறை நடக்கின்ற இடங்களுக்கும், பத்திரிகையில் முதலாவது அறிக்கை விடுவதிலும் நீயா? நானா? முதலில் பார்த்து விடலாம் என்ற வழமையான நிகழ்ச்சி நிரலிலே செயற்படுகின்றார்கள். இது தொடர்பாக காத்திரமான பணிகள் எதையாவது உருப்படியாக செய்கின்றார்களா? அல்லது இன்னும் பாராளுமன்றத்தில் பல் குத்திக் கொண்டிருக்கின்றார்களா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எனவே, இந்த சந்தர்ப்பத்தில் நாம் அரசியல் தலைமைகளை கண் கண்ட தெய்வமாக பார்ப்பதைவிடுத்து முதலில் எமக்குள் இருக்கின்ற பகைமைகளைக் களைந்து நாம் ஒன்று சேர வேண்டும். தூய்மையான இஸ்லாம் மார்க்கத்தை தூற்றிப் பேசுமளவுக்கு நாம் ஒவ்வொரு இயக்கங்களாக, ஜமாஅத்களாக பிரிந்து எங்களின் பலங்களைக் குறைத்துக் காட்டுகின்றோம்.
அன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ முஸ்லிம்களுக்குள் இயக்க வேறுபாடுகள் அதிகரித்துள்ளன என்றுமில்லாதவாறு தற்போது அவைகளுக்கிடையில் பிரச்சினைகள் முற்றிப் போயுள்ளன. சிறியதும் பெரியதுமாக 15 சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன என்று கூறுமளவுக்கு இருப்பதை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டும். முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் முன்னெப்போதும் இல்லாதளவு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இனவாத தீப்பொறிக்குள் கலவரம் ஏற்படின் முஸ்லிம்களுக்கான உதவிகள் மருத்துவமனையிலிருந்து பொலிஸ் நிலையம் வரைக்கும் அனைத்தும் அஸ்தமனமாகிவிடும். நீண்ட நோக்கினை இலக்காகக் கொண்டு சிவில் அமைப்புகள் திட்டமிட்ட பொறிமுறையொன்றைக் கொண்ட நிகழ்ச்சி நிரலை தயாரித்து செயற்பட வேண்டும்.
பெரும்பான்மை பௌத்தர்கள் வாழும் பிரதேசங்களில் இருக்கின்ற முஸ்லிம்கள் நீண்ட நிலைத்திருத்தலின் அடிப்படையில் நிதானமாகச் செயற்பட வேண்டும். கலவரம் வெடிக்கும் நிலை ஏற்படின் முதலாவது வரைபடமாக கையில் எடுக்கப்படுவது மேல்,தென் மாகாணங்களே. எனவே மேற்படி மாகாணங்களில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் எப்போதும் சுதாகரித்துக் கொண்டு இருக்க வேண்டும். பெரும்பான்மையினரின் வியாபார நிலையங்களுக்கு அருகாமையில் கடைகளை, விற்பனை நிலையங்களை, வியாபாரஸ் தலங்களை வைத்திருக்கும் முஸ்லிம்கள் வருமுன் காப்பதே சிறந்தது.
அதே போன்று முஸ்லிம் இளைஞர்கள் பாதையோரங்களில் நின்று கூட்டமாகக் கதைத்துக் கொண்டிருப்பது, பொது இடங்களில் குழுக்களாக நடமாடுவது, இரவு நேரங்களில் பாதுகாப்பில்லாமல் சுற்றுவது, உணர்ச்சிகளைக் கொண்டு கிளர்ச்சியூட்டும் கருத்துக்களை வெளியிடுவது போன்றவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் முகநூல், இணையத்தளங்கள் மூலமாக இனவாத கருத்துக்களை செய்திகளாகவோ, கருத்துப் பதிவுகளாகவோ இடுகின்றவர்களை கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கூறியதற்கமைய அவரது செயலாளரினால் தொழிநுட்பக் குழுவொன்று முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
எனவே இணையத்தளங்கள், முகநூல், மற்றும் இனவாதிகளை தூற்றும் காரசாரமான கருத்துக்கள், ஒளிப்பதிவுகள் என்பவற்றை பதிவேற்றம் செய்யாமல் இருப்பது பொருத்தமாகும்.
எனவே முஸ்லிம்கள் நாடு நகர்கின்ற போக்குகளை அவதானித்து லாவகமாக செயற்பட வேண்டுமேயொழிய நாமும் வலிந்துபோய் மாட்டிக் கொள்ளக்கூடாது.எதிர் வரும் காலங்களில் இனவாதத்தை தூண்டும் பேச்சுக்களும், அசம்பாவிதங்களும் நடைபெறுகின்ற பொழுது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து நமது நிதானத்தை இழந்து விடக் கூடாது.
காலத்தின் தேவை அரிந்து நடந்து கொள்ளவேன்டும் இனவாதக்குலுக்கலை அரிந்து சாதாரன மக்களுடன் நள்ளினக்கம் பேனிநடப்போமானால் மக்களே இப்படியானவர்களுக்கு
ReplyDeleteபதில் அளிப்பார்கள்.