Header Ads



புத்தளம் விவகாரத்தை றிசாத் பதியுதீன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்..!

வண்ணாத்திவில்லு உதவி    செயலாளர் இரு தினங்களுக்கே புத்தளம் நகர சபைக்கு பதில் கடமைக்காக சமுகமளிக்கிறார்.

இலங்கையில் வேறெங்கும் தகுதியானவர்கள் இல்லையென்ற  நினைப்பில் இங்கும் செயலாளராக  அவரை நியமித்துள்ளார்களோ தெரியவில்லை.

கிழமையில் ஒரு நாள் அல்லது 2 நாள்தான் அவர் இங்கு வருகிறார்.
அதிலும்  பெரும்பாலாக பின்னேரம் ஐந்து மணிக்கு பிறகே  நகர சபையில் அவரது பிரசன்னம் இருக்கின்றது.

பொது மக்களின் விண்ணப்பங்கள்,கூளம், வடிகால் பிரச்சினைகள்,  அதிகாரிகளின்  கருத்துக்கள், ஊழியர்களின் கோரிக்கைகள் யாவுமே கிடப்பில்  போடப்பட்டுள்ளன. அன்றாடம்  தமது தேவைக்காக அங்கு  வருகின்ற  பொது மக்கள் ஒன்றுமே  நடக்காமல் வெறும்  கையோடு திரும்பி  செல்கிறார்கள்.

பல்வேறு அதிகாரிகளும் தமக்கு  உரிய முறையிலான பணிப்புரை  இன்றி  என்ன செய்வதென்று புரியாமல்  அல்லலுறுகிறார்கள்.

பல்வேறு தெருக்களில் கிழமைக்கு  ஒரு  தடவையாவது கூளம் எடுப்பது  கூட அபூர்வமாகவே இருக்கிறது.

தற்காலிகமாக வந்து விட்டு செல்லும் அந்த செயலாளர் நகர சபையை நேரம் கடத்தும் இடமாக நினைக்கிறாரோ புரியவில்லை.

எந்தவொரு அலுவலகருக்கும் அந்த செயலாளர் எந்தவொரு பணிப்புரையும்  விடுப்பதில்லை.
இந்த ஊர் மீது பற்றுதலோ அல்லது நகர சபையை நிர்வகிக்கவோ அவரிடம் ஆவலில்லை. சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நகரம் எப்படியும் போகட்டும்  என  நினைக்கிறாரோ புரியவில்லை.

பிளேனிங் கொமிட்டி , புதன் வியாழனில் நடக்கும் கூட்டங்கள் எதுவுமே நடப்பதில்லை. மாத ஆரம்பத்தில் போடப்பட வேண்டிய 
ஒக்டோபர் மாதத்துக்கான பட்ஜெட்டை  இப்போதுதான் முடித்திருக்கிறார்கள்.

கடந்த மாதத்துக்கான டெண்டர் கூட இன்னமும் போடப்படவில்லை.

இப்பொழுது நிர்வாக சேவையில் சுப்ரா க்ரேட்  தகுதி உள்ளவர்களைத் தான் சகல நகர  சபை, பிரதேச சபைகளுக்கும் நியமித்திருக்கிறார்கள்.

அத்தகைய தகுதி வாய்ந்தவர்தான் நகர சபை நிர்வாக அதிகாரி ஷபீக் ஆவார். புத்தளத்தின் நல்லது, கெட்டதில் பங்கெடுக்கும் அவர் அரசியல் சார்பில்லாத சமூக சேவகர்.

அவரை ஏன் எமது நகர சபையின் பதில் செயலாளராக நியமிக்க கூடாது என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இன்னும் ஒரு வருட காலத்துக்கு தேர்தலுக்காக காத்திருக்க வேண்டுமென்றும் கூறப்படுகின்றது.

அது வரைக்கும் நகர சபையின் நிர்வாகம் சிதைந்து போகும் அபாய நிலை காணப்படுகிறது.

எனவே ஒருவித தொய்வு நிலையில் தற்காலிகமாக செயற்படும் உதவி பிரதேச செயலாளரை  வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்தில் முழுமையாக பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கி விட்டு, ஷபீக்கை அந்த இடத்துக்கு நியமிக்க ஜனாதிபதியின் உடனடிக் கவனத்துக்கு கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனிடம் அன்பாக வேண்டுகிறோம்.

முஹ்ஸி
புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர்.

No comments

Powered by Blogger.