மோடியினால் இலங்கையர்களுக்கும் பாதிப்பு
500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் இந்திய நோட்டுக்களை அந்நாட்டு அரசாங்கம் கடந்த வாரம் தடைசெய்து, அதற்குப் பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி யாத்திரை மற்றும் வேறு காரணங்களுக்காக இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குச் சென்றுள்ள இலங்கையர்கள், பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை கொண்டுச் சென்றுள்ள நிலையில், அதனை அங்குள்ள வங்கிகளில் புதிய நோட்டுகளாக மாற்றுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தியவில், தற்போது நபரொருவர் நாளொன்றுக்கு 2,500 இந்திய ரூபாயை வங்கியில் மாற்ற முடியும். அத்துடன், 4,500 இந்திய ரூபாய் வரை ஏ.டி.எம் இயந்திரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும் குறைந்தளவான புதிய பண நோட்டுகளே அந்த இயந்திரங்களில் களஞ்சியப்படுத்தப்படும் நிலையில் மிகக் குறைந்தளவானோருக்கே பணத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு முன்னால் வரிசையாக நிற்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்குச் சென்றுள்ள இலங்கையர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, புதிய பணம் சாதாரணமான புழக்கத்துக்கு வந்து இந்த பிரச்சினை தீரும் வரை இந்தியாவுக்கு இலங்கையர்கள் செல்வதை கூடியளவு தவிர்த்துக்கொள்ளுமாறு இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Post a Comment