சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பு, தேசிய சூறா கவுன்சிலுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம்
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தேசிய மசூரா சபை அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ.
இத்தாள் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தால் அனுப்பி வைக்கப்படும் மின்னஞ்சல்.
எமது உறவுகளின் உரிமைகளை பெற்று கொடுக்கும் நோக்கில் இது அனுப்பிவைக்கப்படுகிறது. முதற்கண் தேசிய சூறா சபை முன்னெடுக்கும் 2017 க்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்திற்கான குழு அமர்வுகளில் முஸ்லிம்களின் சார்பாக நீங்கள் வழங்கவிருக்கும் பிரேரணைகளில் 26 வருடங்களாக பலத்த கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் உட்பட்டு பின்தங்கி வாழக்கூடிய யாழ்மக்களின் விடயங்களையும் தயவு செய்து உள்வாங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்வதுடன் தற்போது குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதி தொடக்கம் மீள்குடியேற்றம், நஷ்டஈடு போன்ற விடயங்களில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள், புறக்கணிப்புக்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி அரசுக்கு அழுத்தம் தெரிவிக்க வேண்டிக்கொள்கிறோம்.
முக்கிய விடயங்கள் சில
1. 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக குறுகிய நேரத்தில் அசையும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கான சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.
2. யுத்தத்தினால் 26 வருடம் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக நாம் இருப்பதால் எமது மக்களின் பிரச்சினைகளையும், தேவைகளையும் கண்டறிந்து திட்டமிட்ட வகையில் பாரபட்சமற்ற சமவுரிமை மற்றும் சமவாய்ப்புகளுடன் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம், நஷ்டஈடு, சமூக நலத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. தற்போது மீள்குடியேற்றத்தில் அரசின் கவனயீனமும் வட மாகாகண சபை மற்றும் முதலமைச்சின் செயற்பாடுகளை கண்டிப்பதுடன் வடமாகாண சபையின் கீழ் செயற்படும் அரச நிறுவங்களும், அதிகாரிகளும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரபட்ச நடவடிக்கைகள், புறக்கணிப்புக்கள், அசமந்த போக்கு, இனவாத செயற்பாடுகளை கைவிட்டு சக உறவுகளாகவும், சக மனிதர்களாகவும் எம்மை மதித்து இன்முகத்துடன் செயற்பட வேண்டும் என்றும், தமிழ் கட்சிகள் மற்றும் அரசுக்கும் வலு சேர்க்க
வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றோம்.
4. யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து அகதி என்ற அடையாளத்துடன் சிதறி வாழும் எமது உறவுகள் 26 வருடமாக கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயதொழில், மற்றும் இன்னும் ஏறாளமான விடயங்களில் பின்தங்கி வாழக்கூடியவர்களாக இருப்பதால் அரசு இவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம், சுகாதார விழிப்புணர்வு, தொழில் வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளை திட்டமிட்டு மேற்கொண்டு சுய கௌரவத்துடன் வாழக்கூடிய சமூகமாக வழிவகுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.
Post a Comment