'உன்னை எண்ணி நான் மிகவும் பெருமைப்பட்டேன்’ - ஒபாமா
சிரியாவில் குண்டுவெடிப்பால் தரைமட்டமான கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பீதியில் உறைந்துப்போய் இருந்த சிறுவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா, அவனை பாராட்டி, வாழ்த்தினார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரத்தின் கிழக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ளது.
இந்த பகுதியை மீட்பதற்காக, மேற்கு பகுதியில் இருந்து அரசின் விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால் அலெப்போ நகரம் எப்போதுமே போர்க்களமாக காணப்படுகிறது.
இந்நிலையில், இங்குள்ள குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றபோது 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டான். அவனது பெயர் ஓம்ரான் தக்னீஷ்.
அவனது தலையில் ரத்தக் காயங்களுடன் உடல் முழுவதும் தூசி படிந்திருந்தது. அவனை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமர வைத்திருந்தனர். அப்போது நடந்ததை அறியாத அந்த சிறுவன் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தினை கையால் துடைக்கும் வீடியோ காட்சி உலகம் முழுவதும் வாழும் மனிதநேயம் மிக்கவர்களை கதிகலங்க வைத்தது.
இதை அறிந்த ஆறுவயது அமெரிக்க சிறுவனான அலெக்ஸ், சிரியா உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட சிறுவனான ஓம்ரானை அமெரிக்காவுக்கு அழைத்துவர அனுமதிக்க வேண்டும் என்று அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி இருந்தான்.
ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான உச்சிமாநாட்டில் அந்த கடிதத்தை ஒபாமா வாசித்தபோது, அங்கிருந்த அனைவரின் கண்களும் கலங்கின.
"நீங்கள் அனுமதித்தால் சிரியாவில் இருந்து ஓம்ரானை அழைத்துவந்து அவனை எங்கள் குடும்பத்தில் ஒருவனாக சேர்த்து கொள்வோம். எனக்கு சகோதரனாக அவன் எங்கள் வீட்டிலேயே வளரட்டும்.
என் பள்ளியில் படிக்கும் மற்றொரு சிரியாவை சேர்ந்த சிறுவனுக்கு அவனை அறிமுகம் செய்து வைப்பேன். நாங்கள் ஒன்றாக விளையாடுவோம், பிறந்தநாள் விழாக்களை கொண்டாடி மகிழ்வோம், அவர்களின் மொழியை அவன் எங்களுக்கு கற்றுத் தருவான்.
என் பள்ளியில் படிக்கும் ஜப்பான் மாணவனுக்கு கற்றுத்தந்ததைப்போல் ஒம்ரானுக்கு நாங்கள் ஆங்கிலம் கற்றுத் தருவோம்’ என கிறுக்கல் கையெழுத்தில் அலெக்ஸ் தனக்கு எழுதியிருந்த நீண்ட கடிதத்தை ஒபாமா வாசித்து முடித்தபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
இந்நிலையில், ஆறுவயதில் பிறஉயிர்களிடத்தில் அன்பு பாராட்டும் அந்த அமெரிக்க சிறுவன் அலெக்சின் மனிதநேயத்தை மெச்சிய அதிபர் பராக் ஒபாமா அவனை வெள்ளை மாளிகைக்கு சமீபத்தில் வரவழைத்து, பாராட்டி, வாழ்த்தினார்.
அல்லெக்சின் கரங்களை பிடித்து அவனை அன்புடன் வரவேற்ற ஒபாமா, நீ மிகவும் அன்பானவனாகவும், கருணை உள்ளவனாகவும் இருப்பதோடு மட்டுமில்லாமல் பிறரையும் அதேவகையில் நினைக்கும்படி தூண்டி விட்டாய். உன்னை எண்ணி நான் மிகவும் பெருமைப்பட்டேன்’ என பாராட்டினார்.
ஓம்ரானை காயப்படுத்திய அதே கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஓம்ரான் தக்னீஷின் மூத்த சகோதரனான 10 வயது சிறுவன் அலி சிகிச்சை பலியின்றி மரணம் அடைந்தான்.
கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ள கிழக்கு அலெப்போ பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 15 ஆயிரம் குழந்தைகள் உள்பட 3 லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் போர் கண்காணிப்பு முகமை தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Post a Comment