முஸ்லிம் சட்டம், அல்லாஹ்வின் சட்டமாகும், அதில் மாற்றம் செய்யமுடியாது - ரிஸ்வி முப்தி
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு தனது சிபாரிசுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி குழு அங்கத்தவர்களிடம் கையளிக்கவுள்ளது.
குழுவில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அச் சிபாரிசுகளை முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரநிதிகளுடன் கலந்துரையாடியதன் பின்பே இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிபாரிசுகளை ஆராய்ந்த பின்பே அதில் உலமா சபை எதிர்வரும் 27 ஆம் திகதி கையொப்பமிடும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றினை நடத்தியது. ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் தேசிய சூரா கவுன்ஸில் வை.எம்.எம்.ஏ. ஜமாஅத்தே இஸ்லாமி உட்பட 18 அமைப்புகளின் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதி சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் கையளிக்கப்பட்டதும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பில் ஆாய்ந்து இறுதி முடிவு எடுப்பது என்று கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த விவகாரத்தில் யாரும் அவசரப்படுத்த தேவையில்லை. அனைவரும் நிதானமாக நடந்துகொள்ளவேண்டும். பொறுமையாக ஒவ்வொருவரும் நிதானமாக தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை சுமுகமாகப் பேசியே தீர்மானிக்க முடியும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அமைச்சர் ஏற்கனவே சலீம் மர்சூபின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள விபரத்தைக் கூறவில்லை. இதனாலேயே இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை 1989 ஆம் ஆண்டிலிருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 25 உலமாக்கள் பங்கு கொண்டுள்ளார்கள். 2009 இல் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையிலான குழுவிலும் உலமா சபை பங்கு கொண்டுள்ளது.
அங்கத்தவர்களாக நானும் செயலாளரும் இருக்கிறோம்.
உலமா சபை முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் தொடர்பாக 40 க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களை பத்வாக் குழுக்களுடன் நடத்தியுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டம் அல்லாஹ்வின் சட்டமாகும். தலாக் போன்ற சட்டத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதில் மாற்றங்களைச் செய்ய முடியாது. அல்லாஹ்வின் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே பிரச்சினைகள் இருக்கின்றன.
எனவே சலீம் மர்சூபின் தலைமையிலான குழுவின் அறிக்கையைப் பெற்றதன் பின்பே எம்மால் இறுதித் தீர்மானத்தை எய்த முடியும் என்றார்.
விடிவெள்ளி ARA.Fareel
Post a Comment