சிவனொளிபாதமலை ஒரு பௌத்த பூமி, மத விஷமிகளிடம் சிக்கவேண்டாம் - பரணவிதாரன
சிவனொளிபாதமலை ஒரு பௌத்த பூமி, அதன் சுற்றுப் பகுதியில் சூழல் பாதிப்போ அல்லது கலாச்சார சீர்கேடோ ஏற்படும் வகையில் எந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தினையும் முன்னெடுக்க இடமளிக்க போவதில்லையென ஊடக பிரதி அமைச்சர் கருபரணவிதாரன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள சிவனொளிபாதமலை உணவு விடுதி தொடர்பான விவகாரமானது அரசினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதிற்கு அமைய, அது தனியார் நிலப்பகுதியில் அமைக்கப்படும் கட்டடம் எனவும், அதற்கும் சிவனொளிபாதமலை வளவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஊடக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு குறித்த காணியானது இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமானதாகும். எனவே அங்கு பள்ளிவாசல் கட்டப்படுவதாகவும், சுற்றுலா விடுதி அமைக்கப்படுவதாகவும் கூறப்படும் விடயங்கள் பொய்யானவை என அவர் தெரிவித்தார்.
மேலும் பௌத்த புனித தலமாக கருதப்பட்டுவரும் இப்பகுதி மும்மதத்தவர்களாலும் மதிக்கப்படும் இடமாகவே இருக்கிறது.
அத்தோடு இந்து, இஸ்லாமிய மதத்தவர்களின் ஒத்துழைப்பு இங்கு அதிகமாகவே காணப்படுகிறது.
சில பழிவாங்கும் குணம் கொண்டவர்களின் செயற்பாட்டால் மதகலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியே இதுவென ஊடக பிரதி அமைச்சர் கூறினார்.
அந்த புனித பூமிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் கைவைக்க இடமளிக்க முடியாது என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், சிவனொளிபாத மலை 99 ஏக்கர்களைக் கொண்ட பிரதேசமாகும். அந்த பகுதிக்கு செல்லும் வழியில் அப்பால் 88 ஏக்கர்களில் ஒரு தனியார் நிலம் இருக்கிறது.
அதில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை தற்போது விடுமுறை விடுதியாக மாற்றுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமையவே கட்டட வேலைகள் நடைபெறுகின்றன. ஆனால், அதில் சுற்றாடல் சம்பந்தமான ஒரு பிரச்சினை தற்போது எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருகின்றது. ஆகவே இது தொடர்பில் யாரும் அவசரப்பட வேண்டாம் எனவும், மத ரீதியான பிரச்சினைக்கு வழிவகுக்கும் விஷமிகளிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் ஊடக பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
Post a Comment