டக்ளஸும், சித்தார்த்தனும் எதிர்க்க மஹிந்தவின் நிலைப்பாடு வேறாக இருந்தது - கோத்தா
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுனர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டு வைத்தார்.
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய “குழப்பநிலை மற்றும் உறுதிநிலை- வட-கிழக்கு சிறிலங்காவில் போருக்குப் பிந்திய அபிவிருத்தியும், நல்லிணக்கமும் ( “Conflict & Stability” – post war development and reconciliation in NE Sri Lanka ) என்ற தலைப்பிலான இந்த நூலின் வெளியீட்டு விழா ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது.
போருக்குப் பின்னர், வடக்கிலும், கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, அந்தக் காலகட்டத்தில் வடக்கின் ஆளுனராக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும், கிழக்கின் ஆளுனராக இருந்த றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரமவும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய சிறிலங்காவின் முன்னான் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,
“விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி, அங்குள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் வரவேற்கவில்லை.
வடமாகாண சபை தேர்தலை நடத்த தயாரான போது, அங்கு தேர்தலை நடத்தினால் அதில் தோல்வியடையலாம் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அதேபோல், அந்த தேர்தலினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம்பெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் என்னிடம் கூறினார்.
எவ்வாறாயினும், வட மாகாணசபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்தார்.
போரின் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்து, அந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன” என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment