எவன் அமெரிக்க ஜனாதிபதியானாலும், எமக்கு கவலையில்லை - வடகொரியா
அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் பொறுப்பேற்றாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஆனால், எங்களுக்கு எதிரான தீண்டாமையை அமெரிக்கா மாற்றிக்கொள்ளுமா? என்பதுதான் தலையாயப் பிரச்சினை என வடகொரியா தெரிவித்துள்ளது.
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது. தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து வடகொரியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
முன்னதாக, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நிறுவவுள்ள ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை (Terminal High Altitude Area Defence (THAAD) system) ஈவிரக்கமற்ற தாக்குதல் மூலம் அழித்து நிர்மூலம் ஆக்குவோம் என வடகொரியா மிரட்டி இருந்தது.
இந்நிலையில், வடகொரியா தொடர்ந்து பரவலாகவும் முழுமையாகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை கைவிடுமாறு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேசுவேன் என முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, அதிபர் தேர்தலில் அவர் வெற்றிபெற்று விரைவில் பதவியேற்கவுள்ள நிலையில் அமெரிக்காவின் வருங்கால அதிபருடனான வடகொரியாவின் எதிர்கால உறவுகள் எப்படி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியா நாட்டின் பிரதிநிதி கிம் யாங் ஹோ-விடம் நியூயார்க் நகரில் நேற்றுமுன்தினம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், ‘அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் பொறுப்பேற்றாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஆனால், எங்களுக்கு எதிரான தீண்டாமை மனப்போக்கை மாற்றிக்கொள்ளும் அரசியல் நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக்கொள்ளுமா? இல்லையா என்பதுதான் தலையாயப் பிரச்சினை’ என தெரிவித்துள்ளார்.
Post a Comment