Header Ads



அமெரிக்காவில் பாரிய மாற்றம் ஏற்படப்போகிறது - ஐரோப்பாவில் உள்ள இலங்கையர் நாட்டுக்கு வரனும்

போருக்கு பின்னர் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது மாத்திரமல்லாது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் நாடுகளுக்கு இடையில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் பாலி மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகளின் 11வது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடல் ஹொட்டலில் நடந்த இந்த கூட்டத்திற்கு பிரதமர் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் அல்லது வன்னியில் வீதிகளை அபிவிருத்தி செய்வது அல்லது கிராமங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டில் உண்மையான அபிவிருத்தி ஏற்படாது.

ஆட்கடத்தல் வியாபாரம் சம்பந்தமாக விபரமாக தகவல்களை நான் இந்த கூட்டத்தில் கூற மாட்டேன். 2002 ஆம் ஆண்டு இருந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதே இதற்கு காரணம்.

ஆசிய பிராந்தியத்தில் தொடர்ந்தும் குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பில் நாடு என்ற வகையில் நாங்கள் தொடர்ந்தும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றோம்.

ஒல்லாந்தர், பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் மனிதர்கள் நாடுகளில் குடியேறுவதில் ஒரு உரிய நடைமுறை இருக்கவில்லை.

சுதந்திரமான நாடுகளாக மாறிய பின்னர், குடியேற்றங்களை எல்லைகளை நிர்ணயித்து முகாமைத்துவம் செய்வது என தீர்மானித்தோம்.

தற்போது சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில் நடுநிலையாக செயற்படுவது என நாங்கள் தீர்மானித்தோம்.

அமெரிக்காவிற்குள் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படப் போவதை எம்மால் காணமுடிகிறது.

அமெரிக்காவில் தற்போது 200 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு குடியேற்ற பிரச்சினைகள் காரணமாக நெருக்கடிகள் ஏற்படவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதை காணமுடிகிறது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.