குசல் பெரேரா பற்றி தவறான ஆய்வு - கத்தார் ஆய்வுகூடத்திற்கு தடை
இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தினார் என தவறான அறிக்கை வழங்கிய கத்தார் ஆய்வு கூடத்திற்கு உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் (-WADA -வாடா) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதற்கான தீர்மானம் வாடா நிறைவேற்றுக் குழுத் தலை வர், இந்தத் தடை நவம்பர் 7 ஆம் திகதி முதல் நான்கு மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என வாடாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறிப்பிட்ட திகதியிலிருந்து கத்தார் ஆய்வுகூடத்தில் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
தடை அமுலுக்கு வரும் வரையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஆய்வுக்குத் தயாராகவுள்ள மாதிரிகள் வாடாவின் அனுமதிக்கப்பட்ட மற்றொரு முகவர் ஆய்வுகூடத்திற்கு பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பிவைக்கப்படவேண்டும் என தற்காலிகத் தடைக்குள்ளான கத்தார் ஆய்வுகூடத்திற்கு வாடா உத்தரவிட்டுள்ளது.
ஆய்வுகள் உயர் நிலையில் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் நோக்கிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகள் மத்தியில் ஆய்வுகள் தொடர்பான நம்பகத்தன்மையை உயர்த்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கத்தார் ஆய்வுகூடம் தனது தடைக்காலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளை முறையாக பேணியுள்ளதை நிரூபித்தால் மீள் அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும் என வாடா குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் வாடாவின் 13.7ஆம் இலக்க விதிகளுக்கு அமைய, தடைக்கான தகவல் கிடைத்த 21 நாட்களுக்குள் விளையாட்டுத்துறை நியாயாதிக்க சபையிடம் கத்தார் ஆய்வுகூடம் மேன்முறையீடு செய்ய முடியும்.
வாடாவின் அனுமதியைப் பெற்றுள்ள 34 ஆய்வுகூடங்களில் தடைக்குள்ளான ஏழாவது ஆய்வுகூடம் கத்தார் ஆய்வு கூடமாகும். பெய்ஜிங், ஆல்மட்டி, புளூம்ஃபொன்டெய்ன், லிஸ்பன், மட்றிட், ரியோ ஆகிய நகரங்களில் இயங்கி வந்து ஆய்வுகூடங்களுக்கு இதற்கு முன்னர் வாடா தடை விதித்திருந்தது.
இதேவேளை, குசல் ஜனித் பெரேரா தொடர்பாக தவறான அறிக்கை சமர்ப்பித்த கத்தார் ஆய்வுகூடம் தொடர்பாக வாடா நிறு வனம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அண்மையில் (நவ. 7) இலங்கை வருகைத் தந்திருந்த வாடாவின் பிராந்திய உறவுகள் பிரதிப் பணிப்பாளர் டொம் மேயிடம் மெட்ரோ ஸ்போர்ட்ஸ் வினவியபோது, ‘‘அது தொடர்பாக வாடாவின் சட்டப் பிரிவே நடவடிக்கை எடுக்கும். வாடா வின் வேறு பிரிவில் நான் கடமையாற்றுவதால் அது குறித்து நான் அறிந்திருக்கவில்லை’’ என பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குசல் ஜனித் பெரேரா தொடர்பாக கத்தார் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வு அறிக்கை தவறானது எனவும் அதனை வாபஸ் பெறுவதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த மே மாதம் 11 ஆம் திகதி அறிவித்தது. இதனை அடுத்து குசல் ஜனித் பெரேராவுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்ககாலிகத் தடையும் உடனடியாக நீக்கப்பட்டது.
இந்த சம்பவத்தினால் பெரேரா எதிர்கொண்ட சொல்லொணா துயரங்களுக்கு வருந்துவதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் றிச்சர்ட் சன் தெரிவித்துள்ளார்.
குசல் ஜனித் பெரேராவுக்கு கேடு விளைவிக்கும் வகை யில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையை கத்தாரில் இயங்கும் ஆய்வுகூடம் வாபஸ் பெற்றதை அடுத்தே ஒழுக்காற்று நடவடிக்கைகளை முடிவுறுத்திக்கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment