ஜனாதிபதிக்கு எதிரான, பாரிய சூழ்ச்சி பரீட்சித்து பார்க்கப்பட்டதா..?
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருக்கடிக்குள் உள்ளாக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
கடந்த வாரம் அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் தேரர்கள் இணைந்து ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்மூலம் ஜனாதிபதிக்கு நெருக்கடி கொடுப்பது சூழ்ச்சியாளர்களின் நோக்கமாகும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் போது, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாட்டில் இருக்கவில்லை.
இந்நிலையில் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன செயற்பட்டுள்ளார். அவர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்கவுக்கு நெருக்கமான ஒருவராகும்.
அத்துடன் அடுத்த பொலிஸ்மா அதிபர் பதவிக்கு வருவதற்கு தகுதியான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாகும்.
அதற்கமைய அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவத்தினருக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார் என்பது தொடர்பில் தற்போது வரையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு உத்தரவிட்டமை தொடர்பில் அமைச்சர் அறிந்திருக்கவில்லை என அமைச்சருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்குள் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுக்கு தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முயற்சித்த நடவடிக்கையின் பின்னால் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் செயற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதென பிரதமர் செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படுகின்ற முன்னாள் மேஜர் ஜெனரல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிகாரி கடந்த காலங்களில் அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் செயற்பாடுகள் பலவற்றுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற சில முறைக்கேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமாதானத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் ஆர்ப்பாட்டத்தை களைப்பதற்கு அவசியமான நீதிமன்ற உத்தரவினை பொலிஸாரினால் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைக்கும் அளவிற்கு அருகில் வருவதற்கு இடமளிக்கப்பட்டமை சந்தேகத்திற்குரிய விடயமாகும்.
நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் எந்தவொரு ஆர்ப்பாட்ட பேரணியையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நடத்துவதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இந்த செயற்பாடு பாரிய சூழ்ச்சிக்காக பரீட்சித்து பார்க்கப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைவதற்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகில் உள்ள குழு ஒன்று திட்டமிட்டள்ளதாக அரசாங்க புலனாய்வு சேவையினால் குறித்த பிரிவுகளின் பிரதானிகளினால் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment