என்னைப் பற்றித் தவறாக தகவல் வெளியானால், நேரடியாக நானே பதிலளிப்பேன் - டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களுக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: சமூக வலைதளங்கள் இன்று அனைவரின் வாழ்விலும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவைதான் இன்றைய காலத்தின் அதி நவீன தொடர்பு சாதனங்கள். அவற்றை மட்டமாக கருதி வெட்கப்பட வேண்டியதில்லை. அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அவற்றை நான் பயன்படுத்திக் கொண்டேன். அமெரிக்க நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் நடுநிலை தவறி, எனக்கு எதிராக கடுமையான எதிர் பிரசாரம் நடத்தின. அந்த எதிர்ப்புப் பிரசாரத்தை முறியடிக்க நான் சமூக வலைதளங்களைத்தான் நம்பினேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் விளம்பரத்துக்காகப் பெரும் தொகையைச் செலவு செய்து கொண்டிருந்தபோது, நான் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி எனது தரப்பு செய்திகளைப் பிரசாரம் செய்தேன். அது பெரும் பலனைத் தந்தது. நான் தேர்தலில் வெற்றி பெற அவை பெரும் உதவியாக இருந்தன. அவர்கள் செலவு செய்த பணத்தைவிட சமூக வலைதளங்களுக்கு அதிக பலம் இருந்தது. என்னுடைய வெற்றி மூலம் அதை நான் நிரூபித்துள்ளேன்.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அதிகமாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வந்தேன். இனிமேல் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன். தேவையானால் மட்டும் மிகக் குறைவாகப் பயன்படுத்துவேன். சமூக வலைதளப் பயன்பாட்டை ஒட்டுமொத்தமாக கைவிட மாட்டேன். சனிக்கிழமை மட்டுமே புதிதாக 1 லட்சம் பேர் எனது சமூக வலைதளக் கணக்கில் என்னைப் பின் தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர். என்னைப் பற்றித் தவறாக தகவல் வெளியானால், நேரடியாக நானே சமூக வலைதளம் மூலம் பதிலளிப்பேன் என்றார் அவர்.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் மொத்தமாக 2.8 கோடி பேர் டொனால்ட் டிரம்ப்பை பின் தொடர்கிறார்கள்.
Post a Comment