மொஹமட் ஷாஜகானின் தத்துவம்...!
-திண்ணனூரான் + மெட்றோ நீயூஸ்-
பயனற்ற காரியங்களில் நாம் தடம் பதிக்கின்ற நாட்டத்திற்குத் தான் ஆசை என்று பெயர். பயனுள்ள செயல்களில் நாம் கொள்கின்ற நாட்டத்திற்குக் குறிக்கோள் என்று பெயர். இவ்வாறான ஒரு குறிக்கோளுடன் வாழும் ஒருவரையே இன்று நாம் சந்திக்கிறோம். “மாங்காய், அன்னாசி, அம்பரெல்லா, கொய்யாக்காய் ஆகிய அச்சாறு வகைகளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்ளது.
இதன் விசேடம், என்னவெனில் அச்சாறு வகைகளை சின்னஞ்சிறு வாண்டுகளில் இருந்து முதியோர் வரை வயது வித்தியாசமின்றி விருப்பத்துடன் வாங்கி சாப்பிடுவார்கள். வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டுக்கு வரும் உல்லாசப் பயணிகளும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக வெள்ளைக்கார பெண்களே எமது நாட்டு இவ் அச்சாறு வகைகளை சிற்றுண்டி வகைகளில் ஒன்று என நினைத்து பெரிதும் மன நிறைவுடன் சாப்பிடுவார்கள்.
அது… அந்த சந்தோஷம் தான் எனது சந்தோசமும்” என்கிறார் அச்சாறு வியாபாரி மொஹமட் ஷாஜகான், வெற்றிப் புன்னகையுடன்.
அன்னாசிக் காயையும் அம்பரெல்லா காய்களையும் படபடவென இயந்திரத்தில் வெட்டுவது போல் இக் காய்களின் மேல் தோலைசீவி, துண்டு துண்டுகளாக வெட்டும் ஷாஜகானின் வித்தையைக் கண்டு நாமும் வியந்து போனோம். இயந்திரமாக இயங்கிக் கொண்டு இருந்தவர் மீது “கேள்வி அரிவாளை” போட்டோம். அவர் கொஞ்சம் மௌனம் காத்தார். அந்த மௌனம் ஏன் என இறுதிவரை எங்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலாமல் தோல்வியடைந்தோம்.
பின்னர் அவர் பேசத் தொடங்கினார். “எனது சொந்த ஊர் களுத்துறை. பல வருடங்களாக கொலன்னாவ மீதொட்ட முல்லையில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றேன். நான் பெரிதாக கல்வி கற்கவில்லை. ஐந்தாம் ஆண்டுவரையே கல்வி கற்க என்னால் முடிந்தது. வறுமை என்பது மிகவும் கொடுமையானது. அதன் வலியை வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
வறுமையில் வாழும்போது அதை சவாலாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வறுமை, வறுமை என சொல்லிக் கொண்டு சோம்பேறிகளாக தொழில்புரியாமல் அடுத்தவரை நம்பி வாழ்வது மூடத்தனமாகும். தாழ்வு மனப்பான்மையை தூக்கி வீச வேண்டும். இந்த தாழ்வு மனப்பான்மைதான் ஒருவரின் பலவீனமாகும். இப் பலவீனமே பலரை ஏமாற்றி பிழைக்க வைக்கின்றது என போடு போட்டார் ஷாஜகான்.
நாமும் பதற்றமடைந்து விட்டோம். அவரின் தத்துவம் உண்மையில் பலருக்கு பெரும் அறிவாகும். வாழ்க்கையில் எவருக்குப் பிரச்சினை இல்லை?. ஏதோ ஒரு வடிவத்தில் அனைவரும் பிரச்சினைகளை தினம் தினம் தொடுகிறோம்” என்றவரின் முகத்தில் பளிச்சென சிரிப்பு தோன்றியது. அவர் வியாபாரம் செய்து கொண்டு இருக்கையிலேயே நாமும் தொண தொணவென, கேள்விகளை கேட்டு நச்சரிக்க அவரும் முகம் சுளிக்காது அம்புகளை போரில் எறிவது போன்று பதில்களை எம்மீது எய்தார்.
“எனது விரல் சூப்பும் வயதிலிருந்து பல்வேறு தொழில்களை செய்தவன். இதற்கு வெட்கப்படத் தேவையில்லை. கூலி வேலை முதல் அனைத்து வேலைகளிலும் தொழிலாளியாக பல வருடங்கள் நின்றதால் நல்ல தொழில் பயிற்சிகளையும் அனுபவத்தையும் பெற்றவன். எங்களைப் போன்றவர்களின் வாழ்வியல் போராட்டத்தை பல முதலாளிகள் தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். அன்று எனது சிறு வயதில் முழு நாளும் உழைப்பை பெற்றவர்கள் மாதக்கடைசியில் சொற்ப சம்பளமாக வழங்கியதை என்னால் மறக்க இயலாது” என ஷாஜகான் எமக்கு தெரிவிக்கையில் அவரின் அனுபவ நினைவு வலி எமக்குள்ளும் வலியை கொப்பளிக்க வைத்தது.
மீண்டும் ஆர்வத்துடன் தொடர்ந்தார் ஷாஜகான். “எனது இருபத்தைந்தாவது வயதில் ஒருவரிடம் அன்னாசி முத்திய காய்களை துண்டு துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய்த் தூள், தேவையெனில் மிளகுத் தூள் தெளித்து விற்கும் தொழிலில் இணைந்தேன். அதன் தொழில் இரகசியத்தை வேகமாக கற்றுக் கொண்டேன்” என்றார். இத் தொழிலில் பல்வேறு சிக்கல் உள்ளது என ஷாஜகான் கூறியதும் நாங்களும் வியப்படைந்தோம்.
“பலர் நினைப்பது போல் இத்தொழில் இல்லை. இத் தொழில் சமூக அக்கறையோடு இணைந்த தொழில். சுத்தம் பிரதானமானது. காய்களை கொள்வனவு செய்கையில் காய்களின் தரம் பார்த்தே வாங்க செய்ய வேண்டும். அன்னாசியானது பழமாக மாறக்கூடிய நிலையை கொண்ட காயாகவும், மாங்காயானது முக்கால் பகுதி பழமாக மாறக்கூடிய நிலையைக் கொண்ட கெட்டி காயாகவும் இருக்க வேண்டும். கொய்யாக்காயும் அரை பழ நிலையை கொண்டதாகவும் அம்பரெல்லா மிகவும் முத்தியதாகவும் இருக்க வேண்டும்” என தகவலை அவர் தெரிவித்தார்.
“எதற்காக இவ்வாறு தரம் பிரித்து கொள்முதல் செய்வீர்கள்” எனக் கேட்டோம். “அன்னாசி அரை பழமாக இருந்தால்தான் சுவை. கலவைகளுடன் நாங்கள் வழங்குகையில் வாயில் வைத்து பற்களால் கடிக்கும் போது ஒரு விதமான சுவையை வழங்கும்.
அச்சுவையானது உண்ணுவோரின் அடி வயிறுவரை படார் என ஊர்ந்து செல்லும். கொய்யா வேறு ஒரு சுவையை அது கொடுக்கும். மாங்காய் மற்றுமொரு சுவையை தரும். அம்பரெல்லா காய்க்கு மற்றுமொரு விசேட சுவையை வித்தியாசமாக வழங்குகின்றது. இதன் சுவை இருவகையை கொண்டது. இனிப்பையும் புளிப்பையும் கொண்ட கலவை கூட்டு சுவையை தரும் திறமையைக் கொண்டது அம்பரெல்லர்.
இவ்வாறான காய்களை சாப்பிடுவோருக்கு மேலும் சுவையை அதிகரித்துதரும் மிளகாய் தூள், உப்புத் தூள், இணைந்த கலவை. சாப்பிடுபவரை சொக்க வைத்துவிடும். இந்த ருசியே பலரை இரண்டு, மூன்று தடவைகள் என்னிடம் அச்சாறு காய்களை வாங்க வைக்கும். இவற்றைவிட மேலாக பலரையும் கொள்ளை கொள்ளும் வகையில் காய்களை வெட்டி பரவலாக அழகாக அடுக்கி வைக்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் விரும்பி சாப்பிடுவதால் சுத்தமாகத் தயாரிக்கின்றேன்.
நான் பல வருடங்களாக கொழும்பு கோட்டை சதாம் வீதியில் எனது நடை வியாபாரத்தை நடத்தி வருகின்றேன். இப் பிரதேசத்தில் பெரும் அரச, தனியார் நிறுவனங்கள் உள்ளன. அதனால் எனக்கு பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாலை மூன்று மணிவரை இங்கு வியாபாரம் செய்வேன். இதன் பின்னர் புறக்கோட்டை பியூப்பல்ஸ் பார்க் கட்டடத் தொகுதியில் வியாபாரம் செய்வேன். இங்கும் எனக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இதனால் நேர்மையோடு எனது வியாபாரத்தை தொடருகின்றேன்.” என் றார் ஷாஜகான்.
இத் தொழிலில் உள்ள கஷ்டம் என்ன? எனக் கேட்டோம்
“காய்களை பொறுக்கி தரம் பார்த்து எடுக்கையில் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கும் வசனங்களும் கதைகளும் எம்மை பயமுறுத்தும். மழை காலங்களில் காய்களை பெறுவதும் விற்பதும் எமக்கு பெரும் சவாலாகும். சில நாட்களில் திடீரென மழை பெய்துவிட்டால் விற்பனை செய்வது மிக மிகப் பெரும் கஷ்ட மான காரியமாகும். இவ்வாறு நிலைமை ஏற்படுகை யில் பணம் பெறாமலேயே தெரிந்தவர்களுக்கு இவற்றை வழங்கி விடுவேன். குப்பைகளில் வீசுவதில்லை.
அது மாபெரும் பாவச் செயலாகும் என்றார் ஷாஜகான். அவரது வியாபார த்தை வீணாக்காது நாமும் அவரிடம் இருந்து விடை பெற்றோம் வியப்புடன்.
படங்கள்: க.பொ.பி.புஷ்பராஜா
நேர்மையான வியாபாரிகள் அரிதாக இருக்கின்ற இக்கால கட்டத்திலே சிறிய வியாபாரமாயினும் நேர்மையாகச் செய்யவேண்டுமென நினைக்கின்ற இவர்போன்ற சகோதரர்களை சமூகம் கைகொடுத்து உதவ வேண்டும்.
ReplyDelete