முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிட சதி - உளவுப் பிரிவு தகவல்
நாட்டில் முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக உளவுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
தம்புள்ளையில் பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இவ்விவகாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்புள்ளையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அமைச்சர் ஹலீம் கருத்து தெரிவிக்கையில்,
தம்புள்ளையில் முஸ்லிம்களும் பெரும்பான்மை இனத்தவர்களும் வரலாறு தொட்டு நல்லுறவுடன் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் அரசியல் சுயலாபம் கருதி தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை ஊதிப்பெருப்பிக்கின்றனர்.
இப்பள்ளிவாசல் விவகாரத்துக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. நகர அபிவிருத்தி அதிகார சபை மாற்றீடாக காணியொன்றினையும் ஒதுக்கியுள்ளது.
பள்ளிவாசலை சூழவுள்ள குடும்பங்களுக்கும் பள்ளிவாசலுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள காணிக்கு அருகில் காணி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி வருகிறோம். தம்புள்ளை பிரதேச செயலாளரிடமும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மை இனத்தவர்களுடன் கலந்து வாழும் பிரதேசங்களில் நாம் முரண்பட்டுக் கொள்ளாது எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசியிருக்கிறேன்.
பள்ளிவாசல் நிர்வாகிகளையும் அழைத்து கலந்துரையாடல்களை நடாத்தத் திட்டமிட்டிருக்கிறேன். விரைவில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
விடிவெள்ளி ARA.Fareel
இன்ஷாஅல்லாஹ் நிரந்தரத்தீர்வு கிட்ட துஆ செய்வோம்,
ReplyDeleteதூண்டுதல் சதி என்பது மறுக்க முடியாத உன்மை, பொறுமைகாப்பது அவசியம் ஆனால் வரம்பை மார்க்கம் காட்டியுள்ளது.
உட்பூசலை தலமேல் தூக்கிப்பிடிக்காமல், ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடிப்போம் இன்ஷாஅல்லாஹ்....
புரிந்துணர்வு என்பதற்காக சமூகம் பிழவுபடுவது வருந்தத்தக்கது.
ReplyDelete