அபூதாலிப்களுடைய உதவியை வேண்டிநிற்கும், இலங்கை முஸ்லிம்கள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி)
யார் இந்த முத்இம் என்ற கேள்வி எழலாம்? இவர் கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை வணங்கிகளில் ஒருவர். நபி(ஸல்) அவர்களுக்கு அபூஜஹ்ல் அல்வலீத், அபூலஹப் போன்ற குறைஷித் தலைவர்கள் பயங்கரமான நெருக்குதல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு மிகவுமே தேவைபட்ட உதவிகளைச் செய்தவர்.இவர் இஸ்லாத்தை கடைசி வரை தழுவியிருக்கவில்லை.ஆனால்,மிக இக்கட்டான இரண்டு சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தைப் பாதுகாத்தார்.
முதலாவது சந்தர்ப்பம்: முஸ்லிம்களும் முஸ்லிம்களுக்கு சார்பாக இருந்த பனூ ஹாஷிம்களும் அபூதாலிப் கணவாயில் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று கூறி குறைஷித் தலைவர்களால் எழுதப்பட்டு கஃபதுல்லாஹ்வில் தொங்கவிடப்பட்டிருந்த பட்டயத்தை தனது கையால் உடைத்து எறிந்தவர் முத்இம் தான். குறைஷியர் மேற்கொண்ட இந்த அநியாயத்தை சகிக்க முடியாத அவரும் இன்னும் சிலரும் இதற்கான திட்டமிடலைச் செய்தார்கள். அதன் பின்னர் தான் நபி(ஸல்) உட்பட ஏனைய முஸ்லிம்களும் பனூ ஹாஷிம்களும் சுமார் 3 வருட துன்பத்தின் பின்னர் கணவாயிலிருந்து வெளிவர முடிந்தது.
முஸ்லிம்களுக்காக்க் குரல்கொடுக்கும் பிறசமயத்தார்
எனவே,முஸ்லிம் அல்லாத அனைவரையும் எமது எதிரிகள் என்ற பட்டியலில் நாம் சேர்த்து விட முடியாது. எமது கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத போதிலும் அவர்களிற் சிலர் எம்முடன் மனிதாபிமான அடிப்படையிலான உறவுகளை வைத்துக் கொள்ளும் தயார் நிலையில் இருக்கலாம். நாம் உதவி கேட்டால் உதவி செய்ய தாராளமாக முன்வரலாம். ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் நிதானமும் மனவலிமையும் அவர்களுக்கு இருக்கலாம். அத்தகையவர்களுடன் நாம் நல்லுறவைப் பேணுவதுடன் அவர்களுக்கு நாம் கைமாறு செய்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) மதீனா வந்த பின்னர் முத்இம் 90 க்கு மேற்பட்ட வயதில் இறந்து விட்டார். பத்ர் யுத்தம் அதற்குப் பிறகு தான் நடைபெற்றது. பத்ர் யுத்தத்தில் குறைஷியர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்ட வேளையில் நபி(ஸல்) அவர்கள் ‘‘முத்இம் இப்னு அதீ இன்று உயிருடன் இருந்திருந்து,இந்த கைதிகள் விடயமாக என்னோடு பேசியிருந்தால் நான் அவர்களை அவருக்காக விடுவித்திருப்பேன்` (புகாரீ) என்றார்கள்.
மேற்கூறிய சம்பவங்களிலிருந்து முஸ்லிம்கள் அடக்கியொடுக்கப்படும் நிலைகளில் நல்லுள்ளம் படைத்த முஸ்லிம் அல்லாதவர்களது உதவிகளைப் பெறமுடியும் என்பதுடன் முஸ்லிம்கள் அதிகாரமிக்கவர்களாக மாறிய பின்னர் அதற்கு கைமாறு செய்ய முடியும் என்பதும் தெளிவாகிறது.
இலங்கை முஸ்லிம்களது தேவை
இலங்கை முஸ்லிம்கள் மிகவும் இக்கட்டான ஒரு கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள். பல சர்வதேச, தேசிய சக்திகள் முஸ்லிம்களை வேரறுத்து விடுவதற்கான திட்டங்களை நேரடியாகவும் திரைமறைவிலும் தீட்டிக்கொண்டிருக்கின்¬றன. நாடு தழுவிய ஒரு கலவரம் முஸ்லிம்களுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் பலமாக இருந்து வருகிறது. மியன்மாரில் நடப்பது போன்ற நிகழ்வுகளுக்கு இங்கு தூபமிடப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்!
அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். எமது பாவங்களிலிருந்து விலகிக் கொள்வோம். எமது பக்கத்தில் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றனவா என்று சிந்திப்பதும் அப்படி இருந்தால் எம்மை நாம் திருத்துவதும் எமது கடமை . ஆனால்,அத்துடன் நிறுத்திக் கொள்ளக்கூடாது. இந்த நாட்டில் எமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் உடைந்து கொண்டு போகும், எமக்கும் பிற சமூகங்களுக்குமிடையிலான உறவை மீளவும் கட்டியெழுப்பவும் சமாதான சக வாழ்வை மேற்கொள்ளவும் நாம் தீவிர முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சாணக்கியத்தோடும் தூர நோக்கோடும் நகர்வுகள் தேவை. எமக்குள் மாத்திரம் குறுகிக் கொண்ட மூடுண்ட ஒரு சமூகமாக நாம் இங்கு வாழ முடியாது. பிற சமூகங்களுடன் நல்லுறவைப் பேணவும் அவர்களுக்கு மத்தியிலுள்ள நன் மக்களை எமது முயற்சிகளுக்கு உள்வாங்கவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
பிற சமயத்தவரான அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொடர்பு சாதனத்துறையில் இருப்போர், பல்கலைக்கழக மட்டங்களிலுள்ள அறிஞர்கள், சட்டத்துறையினர் ஆகியோருக்கு மத்தியிலுள்ள சிலர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். முஸ்லிம் அமைச்சர்கள் கூட வாய் திறக்க தயங்கும் போது முஸ்லிம் சமூக அவலங்களைப் பற்றி அவர்கள் தைரியமாகப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். அவர்களை நாம் இனம் கண்டு அவர்களுடன் கூட்டிணைந்து அவர்களைப் பயன்படுத்தி எமது சகவாழ்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பெளத்த, இந்து, கிறிஸ்தவ மதப் பெரியார்களிற் சிலர் கூட இனவாதத்தை பகிரங்கமாக எதிர்க்கிறார்கள். இப்படியான சிலருடன் இணைந்து செயற்படுவதற்கான செயற்றிட்டமொன்றை வகுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஏற்கனவே சில முஸ்லிம் அமைப்புக்களும் தனிமனிதர்களும் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டுவது பாராட்ட்த்தக்கதாகும். அம்முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
பெளத்த சமுதாயத்திலுள்ள சில முக்கியமான தேரர்கள் இந்தவகையில் குறிப்பிடத்தக்கவர்களாவர்:
# சபரகமுவ பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புருகமுவே வஜிரநாயக தேரர், ஜயவர்தனபுர பல்கலைக் கழக விரிவுரையாளர் தம்பர அமில தேரர்,பாலி பெளத்த பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கல்லெல்ல சுமனசிரி,கலாநிதி மகிந்த தீகல்ல,மாதம்பகம அஸ்ஸஜி தேரோ,மஹாபோதி விகாரையின் பிரதம குரு பனாகல உபதிஸ்ஸ தேரோ,தியகடுவெவ சோமானந்த தேரோ,கலடுவெவ பஞ்சாலோக தேரர்,பன்னில ஆனந்த தேரர்.
#இவர்களோடு கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பாதிரியார் சரத் ஹெட்டியாராச்சி, பாதிரியார் அனுர செனவிரத்ன,பாதிரியார் திலகரத்ன பாதிரியார் வெலிகட ஆராச்சி போன்றோரும்,
#மற்றும் பேராசிரியர் ஜயந்த செனெவிரத்ன, கலாநிதி நிர்மல் ரஞ்ஜித் பெரேரா,பிரபல பத்திரிகையாளர் விக்டர் ஐவன் போன்றோரும் இனம்காணப்பட்டிருக்கிறார்கள்.அதேபோன்று இந்துக்களது சமூகத்திலும் பல குருக்கள் இருக்கிறார்கள்.அவர்களும் இனம்காணப்பட்டு இந்த முயற்சிகளில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இத்தகையவர்களுடன் தொடர்புகளை உருவாக்கி, பலப்படுத்தி சமாதான சகவாழ்வுக்கான திட்டங்களை கூட்டாக இணைந்து மேற்கொள்ளலாம். . அதன் மூலம் ”Win Win Situation” என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போன்று இரு தரப்பினருக்கும் நலன்களை ஈட்ட முடியும்.முஸ்லிம்கள் இந்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்தால் அது முஸ்லிம் சமுதாயத்துக்கு பயன் தருவது போல இந்த நாட்டுக்கும் அது பயனளிக்கும்.
எனவே,முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் சூழலில் பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து ஒதுங்கி வாழாமல் அவர்களது நல்ல காரியங்களில் ஒத்துழைப்பதுடன் முஸ்லிம் சமூக உரிமைகளை வென்றெடுக்கவும் நாட்டின் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்பவும் அவர்களுடன் இணைந்து செயற்படவேண்டிய சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்படுவதும் அவர்களது உதவியைப் பெற்ருக்கொள்வதும் காலத்தின் தேவையாகும்.முஸ்லிம் அல்லாத அனைவரும் துவேஷிகள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடாமல்,அனைவரையும் ஒரே தராசில் போட்டுப் பார்த்துவிடாமல் இதய சுத்தியோடும் அர்ப்பணிப்போடும் அவர்களை அரவணைத்துக் கொண்டு எமது நிகழ்சித் திட்டங்களை முன்னெடுப்போமாக!
இது நபி(ஸல்)அவர்களது வழிமுறையுமாகும். ஈற்றில் முஸ்லிம் சமூகம் மாத்திரமின்றி முழு நாட்டு சமூகங்களும் பயனடைய வேண்டும் என்ற பரந்த மனப்பாங்கும் இஹ்லாசும் இருப்பின் அல்லாஹ்வின் அருளும் மகத்தான கூலியும் கிட்டும். அல்லாஹ் உதவி செய்வானாக!
சிறப்பான ஆக்கம் !
ReplyDeleteWell said.
ReplyDeleteYes, very good sage advice. May almighty Allah bestow best statesman to our Muslim society as we're in dire need of such statesman , not politicians !
ReplyDeleteMay Allah Bless the brother for enlightening the hearts of Muslims in this issue.
ReplyDeleteMuslims do Respect the Good people of other religions and we should help them in their worldly issues at our best.