Header Ads



இஸ்லாமியர்களை வெளியேற்றுவேன், என்கிற சூளுரைக்கு என்னாகும்..?

அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 8-ம் தேதிக்கு முதல்நாள் வரை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் சற்று ஹிலரி பக்கமே சாய்ந்து இருந்தது. முதல் பெண் அதிப‌ரை வரவேற்க அமெரிக்கா தயாராகிவிட்டது என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், அமெரிக்கர்கள் தங்கள் மனநிலை வேறு என்று நிருபித்துள்ளனர். ஒரு வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர், மீம்ஸ் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி டொனால்ட் ஜான் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். ஆம் இது தான் அமெரிக்காவின் மனநிலை. அவர்களுக்கு ட்ரம்ப் போன்றவர்களை தான் பிடித்திருக்கிறது.
ஆரம்பம் முதலே மூன்று விஷயங்களில் தான் ட்ரம்ப் கவனம் செலுத்தினார். அவை வெற்றி , ஒப்பந்தம் , சுவர் எழுப்புவது. இதைத்தான் ட்ரம்ப் முன்னிறுத்தி வந்தார். இதற்கிடையில் தான் ஜான் ஆலிவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ட்ரம்பின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்தது. பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினார் என்ற விஷயமும், இஸ்லாமியர்களை வெளியேற்றுவேன் என்கிற சூளுரையும் ட்ரம்ப்பை கிட்டத்தட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்க வைக்கும் என்கிற மாயையை அனைவரிடமும் உருவாக்கின.
விமர்சனங்களை விளாசிய ட்ரம்ப்...!
ட்ரம்ப் தன் மீதான விமர்சனங்களைத்  தனக்குச்  சாதகமாக மாற்ற என்ன செய்தார் என்பது தான் க்ளைமேக்ஸ். ட்ரம்ப் தனது நிலைப்பாடுகளை எந்த விமர்சனத்துக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை. இது தான் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்குமே அவரை பிடிக்க முக்கியக் காரணமானது. எப்போதும் அமெரிக்கர்களின் மனநிலை கொஞ்சம் அழுத்தமானதாகவே  இருக்கும். அதுதான் அவர்களை உலக அரங்கில் வல்லரசு என்கிற பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதனால் எப்போதும் அவர்களுக்கு விடாப்பிடியாக இருப்பவர்களைப் பிடிக்கும். அதோடு வரலாற்றை மாற்றி எழுதவும் விரும்பாத நாடாக இருந்து வந்துள்ளது அமெரிக்கா. ஒரு பெண்ணை அதிபராக்கிப் பார்க்கக்கூடாது என்பதில் அமெரிக்கர்கள் இன்று வரை ஆணித்தரமாக இருக்கிறார்கள். அதன் விளைவே இத்தனை ஆண்டுகளில் ஒரு பெண் அமெரிக்க அதிபர் ஆகவில்லை.
இதோடு சேர்த்து ட்ரம்பை பலப்படுத்திய விஷயங்கள் வேறு.  பேச்சுத்திறன் அவரது உத்திகளில் ஒன்று. பயப்படாத, தடையற்ற கம்பீரமான பேச்சு அவருக்கு. அதிலும் அமெரிக்காவின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் அவரின் திடமான ஆரம்பகால பிரசார உரைகள்  அமெரிக்கர்களைப்  பெரிதும் கவர்ந்தது.
ட்ரம்பின் வெற்றிக்கு இன்னொரு காரணம், அவரது பிராண்ட் இமேஜ். தன்னைப்  பற்றிய தாக்கத்தை மக்கள் மத்தியிலும், அவருக்கு அதிக ஆதரவுள்ள மாகாணங்களிலும் குறையாமல் பார்த்துக் கொண்டார். அதேபோல் அவர் வலியுறுத்திய விஷயத்தைப் பின்பற்றவும் செய்தார்.  சில இலக்குகளை எப்படியாவது அடைவது என்று நினைத்து விட்டால், அந்த இலக்குகளைப் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார். மற்ற நாடுகளின் கலாச்சாரமும், அமெரிக்க கலாச்சாரமும் வேறு. இந்தியர்களுக்குச் சரியில்லை என்று தோன்றுவது அமெரிக்கர்களுக்குச் சரியாகத் தோன்றலாம். இதனையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் ட்ரம்ப். அமெரிக்கர்களை  ஊக்குவிக்கும் விதமாக பிரசாரம் செய்த ட்ரம்ப் தனது ஆதரவை தக்க வைத்துக்கொண்டார்.
வித்தியாசமான அமெரிக்கர்களின் மனநிலை !
ஒருவருக்குச் சத்தமாக இருப்பது இன்னொருவருக்கு இசையாக இருக்கும் என்பது தான் கூற்று. மற்ற நாட்டினரும் ட்ரம்ப் ஒரு வியாபாரி, உளறு வாயர் எனப் பல விமர்சனங்களை வைத்தாலும் அமெரிக்கர்களில் ஒரு பெரும் பிரிவினருக்கு ட்ரம்ப்பை மிகவும் பிடித்து இருக்கிறது. அமெரிக்கா முதலாளித்துவ நாடு என்ற பிம்பத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ள விரும்பாத நாடு. ட்ரம்ப் போன்ற வியாபாரிகளை அமெரிக்கா தள்ளி வைக்காது என்பதை அமெரிக்கா நிருபித்துள்ளது.
அதோடு இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்கள் காலத்தில் மிகப்பெரிய போர்களை அமெரிக்கா நடத்தியுள்ளது. மற்ற நாடுகளிடத்தில் பெரியண்ணன் மனப்பான்மையையும் கடைபிடித்து வந்திருக்கிறது. அதனைப் புதிதாக வருகிற ஒரு பெண்ணால் செய்ய முடியாது என்ற எண்ணமும், இறுதி நேரத்தில் ஹிலரியின் மீது வீசப்பட்டது. அதே நேரத்தில் பதிலளிக்க முடியாத சில குற்றச்சாட்டுகளும், ஹிலரியின் உடல் நிலையும் ட்ரம்புக்குச் சாதகமாக அமைந்தது.
என்னதான் ஆரம்பத்தில் வாக்குக்காக உலக நாடுகளை விமர்சித்தாலும், இறுதியில் இந்தியா, மோடி, அமைதி, வேலைவாய்ப்பு என ட்ரம்ப் அடித்த சிக்ஸர்கள் அவருக்கு வாக்குகளானது என்றும் கூறலாம். ஒபாமா காலத்தில் அமெரிக்கா பெரிதாக வளரவில்லை. மீண்டும் ஜனநாயக கட்சிக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கர்கள் நினைத்திருக்கலாம். அதனால் தான் அமெரிக்கர்கள் ''மேக் அமெரிக்கா க்ரேட் எகெய்ன் '' என்பதை நம்பி இருப்பார்கள். ஆனால், உங்கள் மேடை பேச்சு அல்ல அமெரிக்க அதிபர் பதவி. வியாபாரத்தில் நஷ்டம் வந்தால் சரி செய்துவிடலாம். உங்களை வியாபாரியாக இல்லாமல் அதிபராகவே பார்க்கதான் உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறந்த அமெரிக்காவை உருவாக்க வாழ்த்துக்கள் மிஸ்டர் ட்ரம்ப்...!

4 comments:

  1. இனவாதத்தால் ஆட்சியமைக்க முடியும் என்று நிரூபித்த அமெரிக்கன்.. இங்கு ராஜபக்ச கள் உஷாராவார்கள்..

    ReplyDelete
  2. போட இடே

    ReplyDelete
  3. ஆட்சிக்கு வர முன்பு உளறுவதையும் வந்தபின் அவற்றையெல்லாம் மறந்து விடுவதையும்
    எவரும் மறக்க மாட்டார்கள்!

    ReplyDelete
  4. قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ بِيَدِكَ الْخَيْرُ‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
    (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
    (அல்குர்ஆன் : 3:26)

    ReplyDelete

Powered by Blogger.