Header Ads



விஜயதாஸாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து, பகிரங்கக் கடிதம்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல் அமைச்சர் அவர்களே!

கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக மேற்கொண்ட தவறான கூற்றுக்கள் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீர விசாரிக்காமல், முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ள சில அமைப்புக்களின் பெயர்களை குறிப்பிட்டு, வரவு செலவு திட்டம் தொடர்பான உரையின் போது அதனுடன் எந்த வித சம்பந்தமுமில்லாத ஒரு விடயத்தை பற்றி தவறான தகவல்களை தாங்கள் வெளியிட்டுள்ளமை நம் சமூகத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இனங்கள் மத்தியில் அநாவசிய பதற்ற நிலை உருவாகியுள்ளதுடன் மீண்டும் துளிர் விட்டு வரும் அமைதிக்கும் சமாதானத்திற்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அமைதியை சீர்குலைப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் அரச விரோத சக்திகள் பௌத்த - முஸ்லிம் கலவரம் ஒன்றை தூண்டிவிட சதி செய்து வருகின்றனர் என அண்மையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தாங்கள் மேற்கொண்ட மேற்படி பொறுப்பற்ற கூற்று அமைதியையும் ஐக்கியத்தையும் விரும்பும் இலங்கையர் மத்தியில் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளை குழப்பங்களை விரும்பும், தீவிரவாத மற்றும் இனவாத சக்திகளுக்கு தங்களுடைய கூற்று மேலும் எரிபொருளை வழங்கியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தங்களுடைய அக்கூற்றின் பின்னர் கண்டி போன்ற பகுதிகளில் மதவாதிகளும் இனவாதிகளும் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய கோஷங்களை எழுப்பியமை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். இந்த நிலை பூதாகாரம் பெரும் பட்சத்தில் நல்லாட்சியின் வீழ்ச்சிக்கு வித்திட்டவராக தாங்கள் குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறான ஒரு இட்டுக்கட்டு தங்களுக்கு ஏற்படக் கூடாது என்பதே எமது உளமார்ந்த பிரார்த்தனையாகும்.    

பாராளுமன்றத்தின் வரப்பிரசாதங்களின் போர்வையில், அடிப்படையற்ற தகவல்களை பொருத்தமற்ற விதத்தில் கூறுவது முக்கிய அமைச்சொன்றின் அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி சட்டதரணி ஒருவரான தங்களுக்கு சிறிதும் பொருத்தமற்ற செயலாகும். அது மட்டுமின்றி தேசத்தின் அதியுயர் சட்ட சபையில், இந்நாட்டுப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முன்பே மேற்படி கூற்றை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்கள் குற்றம் சாட்டும் விடயங்கள் தொடர்பான திகதிகள், பெயர்கள், இடங்கள் உள்ளிட்ட அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைக்குமாறு நீங்கள் அப்பிரதிநிதிகளால் வலியுறுத்தப்படும் பட்சத்தில் உங்கள் நிலை என்னவாகும் என நீங்கள் சற்று சிந்தித்திருக்க வேண்டும். அதை விடுத்து, முஸ்லிம் மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள அமைப்புக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக, அவற்றில் கல்வி கற்பிக்கும் வெளிநாட்டு ஆசிரியர்கள் சிறார்களுக்கு தீவிரவாதத்தை போதிக்கின்றனர் என்றும், இங்குள்ள 4 முஸ்லிம் பிரிவுகளின் அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்கள் என்றும், எங்கோ ஒரு நபர் சிறுமி ஒருத்தியை மணம் புறிந்துள்ளார் என்றும் ஆதாரமற்ற செய்திகளை பாராளுமன்றம் போன்ற ஒரு உயரிய ஸ்தானத்தில் கூறுவது புகழ்பெற்ற தங்கள் சட்ட வல்லமையையே சந்தேகம் கொள்ளச் செய்;துவிடும்.   

இதற்கெல்லாம் மகுடம் சூட்டினாற்போல், நான்கு இலங்கை முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சிறுமிகள் உட்பட 32 பேர் ​ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைவதற்காக நாட்டை விட்டுச் சென்றுள்ளார்கள் என்றும் நீங்கள் ‘தகவல்’ வெளியிட்டுள்ளீர்கள். சதிகார இஸ்ரேலின் கோர நிகழச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக ​ISIS அமைப்பை யார் உருவாக்கினார்கள், யார் அதற்கு பயிற்சி வழங்கினார்கள், யார் அதற்கு நிதி வழங்குகின்றார்கள் போன்ற மர்மங்கள் தொடர்பான உண்மைகள் வெளியாகியுள்ள நிலையிலேயே தாங்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்துள்ளீர்கள்.

பல காலம் தொட்டு ​ISIS அமைப்புடன் இணைவதற்காக, அவ்வமைப்பால் மூலை சலவை செய்யப்பட்டவர்கள் உலகின் பல நாடுகளில் இருந்து சிரியாவிற்கு செல்வது பற்றி சகலரும் அறிவர். இதற்கான காரணம் இவ்வுலகை திரை மறைவில் இருந்த வண்ணம் ஆட்டிப்படைக்கும் சில வல்லரசு சக்திகள் தான் என்ற விடயமும் உலகறிந்ததே. இது தற்காலத்து புவியரசியலின் ஒரு மறுக்க முடியாத யதார்த்தமாகும்.  

இது தொடர்பாக தாங்கள் அறியாத அல்லது மறந்து விட்டுள்ள ஒரு விடயத்தை நான் இங்கு நினைவுகூற விரும்புகின்றேன். அதாவது, ​ISIS அமைப்புப் பற்றி நம் நாட்டு ஊடகங்கள் அதிக அக்கறையுடன் தகவல்களை வெளியிட்டு வந்த 2015 காலக் கெடுவில் நாட்டின் முக்கிய முஸ்லிம் அமைப்புக்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படை பிரதானிகள், பொலிஸ் மாஅதிபர், உளவுப்பிரிவின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரை பிரதம மந்திரி அவர்கள் அழைத்து அவ்வமைப்பு மற்றும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட வதந்திகள் பற்றி விசாரித்தார். அதன் போது ஏனைய சிலருடன், அழைப்பின் பேரில் சென்ற நாமும் அக்கலந்தாலோசிப்பில் பங்கேற்றேன். 

அதன்போது பங்கேற்ற அனைவரது மெச்சத்தகு ஒத்துழைப்பு, தொடர்பாடல், ஒருங்கிணைப்பின் பயனாக, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துடன் தொடர்பான உயர் அதிகாரிகள் மற்றும் அரசின் பிரதானிகளுடன் மேற்கொள்ளப்பட்ட அந்த கலந்தாலோசிப்பின் பின் அப்போது முஸ்லிம்கள் பற்றி எழுப்பப்பட்ட பல வீண் சந்தேகங்கள் முற்றாக நீக்கப்பட்டன. இதற்காக அரசாங்கம் காட்டிய அக்கறை மற்றும் உளவு அமைப்புக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நாம் பெரிதும் போற்றினோம்.    

உண்மை நிலை இவ்வாறிருக்க மக்கள் பிரதிநிதிகள் முன் எழுந்து நின்று எவ்வித ஆதாரமும் இன்றி மடை திறந்தாற் போல அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களை தாங்கள் முன்வைத்துள்ளீர்கள். பலமான ஆதாரங்களுடனும் அசைக்க முடியாத சாட்சிகளுடனும் உளவுத் துறையின் அறிக்கைகளுடனேயே அதை நீங்கள் செய்திருக்க வேண்டும். அவ்வாறின்றி இது போன்ற சிறு பிள்ளைத்தனமான கூற்றுக்களால் பாராளுமன்றம் போன்ற ஒரு உயர்வான சபைக்கு எவ்விதப் பிரயோசனமும் கிடையாது.

இருப்பினும் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்த தருணம் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் ஒரு தூண்டுதலாகவே இருக்கும்.  அது தவிர, நமது நாட்டிற்கு வருகை தர எண்ணியிருந்த முதலீட்டாளர்கள் எத்தனை பேர் தங்களது மேற்படி கூற்றினால் குழப்பமடைந்து தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா?

மேலும், தங்கள் பொறுப்பற்ற கூற்று மூலம் அரசின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்பக்களுக்கு ஏற்படும் பின்னடைவு பற்றி நீங்கள் எண்ணிப் பார்த்தீர்களா? அது மட்டுமன்றி, அமைதியை விரும்பும் பெரும்பான்மை நாட்டு மக்களுக்கு இதன் மூலம் ஏற்படும் மன அழுத்தம் பற்றி நீங்கள் யோசித்தீர்களா?  அல்லது இது பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டமிட்டதொரு முன்னுரையா?

சகவாழ்வு மற்றும் அமைதியை நிலைநாட்டவும், பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த பிரிவினைவாத மோதலினால் சின்னாபின்னமாகிப் போன தாய்த்திருநாட்டை கட்டியெழுப்பவும் வேற்றுமை பாராது சகல இன மக்களும் கைகோர்த்து நிற்கும் தற்போதைய நல்லாட்சி காலகட்டத்தில் இது போன்ற பிரிவினையை ஏற்படுத்தும் கூற்றுக்களை வெளியிடுவதில் உள்ள விவேகம் தான் என்ன? தங்களைப் போன்ற புகழ் பெற்ற மேதை மற்றும் அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த தடுமாற்றம் தொடர்பாக நம்மால் ஊகிக்கக் கூடிய ஒரே விளக்கம் தவறான தகவல்கள் தங்களுக்குத் தரப்பட்ட நிலையில் இது போன்றதொரு கூற்றை நீங்கள் பாராளுமன்றத்தில் கூறியிருக்க வேண்டும் என்பதே.

அவ்வாறிருப்பின், மேற்படி தவறான தகவல்களை தங்களுக்குத் தொகுத்துத் தந்தவர்கள், அதன் மூலம் ஒரு அமைச்சர் என்ற தங்களுடைய தற்காலிகமான கண்ணியம்; எவ்வாறிருப்பினும், ஒரு கற்றறிந்த முதல் தர சட்டதரணி என்ற அடிப்படையில் தங்கள் கீர்த்திக்கு ஏற்படும் மாசு பற்றி சிறிதும் சிந்தித்தப் பார்த்ததாகத் தெரியவில்லை.

இவ்வாறான தர்மசங்கடத்திற்கு உட்படுத்துபவர்களால் தாங்கள் சூழப்பட்டிருப்பீர்கள் எனில்,
முஸ்லிம்கள் பற்றிய கூற்றுக்களை வெளியிடுவதற்கு முன் அவை தொடர்பான மிகச்சரியான தகவல்களை தந்து தங்களுக்கு ஒத்தாசை வழங்குவதற்கு தேசிய ஷூரா சபை என்றும் தயாராக இருப்பதாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 

தாரிக் மஹ்மூத் தலைவர், -தேசிய ஷூரா சபை​

4 comments:

  1. It's not clear whether this letter has been sent to the minister concerned. This should be sent to him

    ReplyDelete
  2. மஹிந்த அல்லது றாஜபக்க்ஷ எனும் பெயெர்கள் இருக்குமிடமெல்லாம் குளப்பத்திற்கு குறைவிருக்காதுபோலும்???

    ReplyDelete
  3. Do you guys think that the Racist People do really care what " Thambiya" says ?
    Keep scratching their back, and dream that they will do any favor to Muslims.
    They all plan to distablise Muslims economically, once we are down in that then all hell will break lose, eventually we have bow and beg.
    Keeping silent is not the answer , prepare ourself before it's too late. Unite amongst us show them the strength that we are not divided.

    ReplyDelete

Powered by Blogger.