Header Ads



நாடுமுழுவதும் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குக - நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்

இலங்கையில் ஒற்றுமையுடன் வாழ்கின்ற இனங்களுக்கிடையில் இனவாத கருத்துக்களை விதைத்து நாட்டில்  மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சில சர்வதேச சக்திகள் முயற்சி செய்வதாகவும், அதற்கு உள்நாட்டிலுள்ள சில சக்திகள் துணைநிற்பதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இதனை தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நாட்டின் பொருளாதாரத்துக்கும் - அபிவிருத்திக்கும் பாரிய தடையாக அமையும் என எச்சரிக்கை விடுத்தார்.  

அதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக மேற்டிகொள்ளப்பட்டு வரும் இனவாத பிரசாரங்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன், பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கடும் தொனியில்  சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
நாட்டில் சிறுபான்மையினமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எதிராக குரோத –விரோத பேச்சுக்களை பேசி பெரும்பான்மை மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து நாட்டில் மீண்டுமொரு கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. அது மட்டுமல்லாது இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதற்கு பல்வேறுபட்டட சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்செயற்பாடுகளுக்குப் பின்னால் சர்வதேச சக்திகள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகள் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் தமிழ் மக்களுக்கு மாத்திரம் பாதிப்பாக அமையவில்லை. நாட்டின் பொருளாதாரம் - அபிவிருத்தி என்பனவும் அதனால் குட்டிச்சுவரானது. நாம் சர்வதேச ரீதியில் அபிவிருத்தியடைந்த மலேசியா, சிங்கப்பூர்,சீனா போன்ற நாடுகளுடன் எம்மை ஒப்பிடும் போது அவர்களுக்கு முன்னாள் அபிவிருத்தியடைந்த நாம் யுத்தம் காரணமாக இன்று 30 வருடங்கள் அபிவிருத்தியில் பின்நோக்கியுள்ளோம்.
எனவே, நாட்டின் பொருளாதாரம் - அபிவிருத்தி என்பவற்றை கட்டியெழுப்புதல் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை இங்கு கொண்டுவருவதாக இருந்தால் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவு பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் அமைதி நிலவ வேண்டும்.
கடந்த ஒரு மாதகாலமாக மீண்டும் தலைதூக்கியுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள், பேச்சுக்கள், தாக்குதல் சம்பவங்கள் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசு உடனடியாக இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான முனைப்புக்கள் என்பது நாட்டின் அமைதியான சூழலிலே தங்கியுள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு இவ்விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
இனரீதியான மோதல்களை ஏற்படுத்த முயற்சி செய்கின்றவர்கள் யாராக இருந்தாலும்;; அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அரச – மத அழுத்தங்களுக்கு கட்டுப்படாமல் பொலிஸார் சட்டத்தை நிலைநாட்டும் போது மாத்திரமே நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும்.
அளுத்கமையில் ஏற்பட்ட சம்பவம் இந்நாட்டின் ஆட்சியையே மாற்ற காரணமாக அமைந்தது. அதுபோன்ற இன்னொரு கலவரம் ஏற்படுத்துவதற்கு இந்த அரசு இடமளிக்கக் கூடாது. சிறுபான்மை மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து நல்லாட்சி அரசை உருவாக்கியுள்ளனர். ஆனால், சிறுபான்மை விடயத்தில் இந்த அரசு கடந்த அரசை விட மோசமாக செயற்படுகிறதா? அல்லது கடந்த ஆட்சியை விடவும் இந்த ஆட்சியில் இனரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளனவா? என்று சந்தேகிக்குமளவுக்கு இன்றை நிலை உருவாகியுள்ளது. ஆகவே, உடனடியாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்ப்பதற்கான பணிகள் - முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஆகியோரும் இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதிலுமுள்ள மதஸ்தளங்கள் குறிப்பாக பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பை வழங்க இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி எந்தவொரு பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்படாமல் தடுக்க வேண்டும்.
பள்ளிவாசல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், கடந்த சில நாட்களாக பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான இனவாத செயற்பாடுகளை தடுக்காவிடின் நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. எமது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்குடன் சில சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன. இனமோதல்களை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்த்த முடியும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் உல்லாச பயணத்துறையை வீழ்த்தி அவர்களது நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் இதனூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் உள்ளுர் பிரச்சினையல்ல மாறாக சர்வதேச பிரச்சினை. ஆகவே, உள்ளுர் சக்திகளை கட்டுபடுத்தி சர்வதேச சக்திகளுக்கு பதிலடி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- என்றார்.  

1 comment:

Powered by Blogger.