சிங்கள - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு, தீவிர முயற்சி - ஜனாதிபதி எச்சரிக்கை
MM.Minhaj
நாட்டில் தற்போது சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பல்வேறு அமைப்புகள் உருவெடுத்து செயற்படுகின்றன. எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில்,
அதிகாரபரவலாக்கம் , ஜனாதிபதி முறைமையை நீக்கல், புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தல் போன்ற அனைத்து பிரச்சினைக்கும் புதிய அரசியலமைப்பில் தீர்வு வழங்கப்படும். புதிய அரசியலமைப்பில் அதற்கான நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் 22 மாத காலப்பகுதியில் எம்மால் செய்ய முடியுமான அனைத்தையும் செய்து முடித்துள்ளோம். எமது செயற்பாடுகள் குறித்து சிலருக்கு சந்தோஷம் .ஒரு சிலர் நிலைமை அறிந்தும் அதிருப்தியில் உள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை இலகுவாக முன்வைக்க முடியும். அதற்கு ஜனநாயக ரீதியான உரிமையை தற்போது நாம் வழங்கியுள்ளோம்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றுவதற்கு எமக்கு ஏற்பட்ட சிரமம் எவருக்கும் தெரியாது. சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காவிடின் குறித்த சட்டம் நிறைவேறியிருக்காது. எனவே சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை நான் பொறுப்பேற்றமையினாலேயே 19 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது.
அத்துடன் தனக்கான அதிகாரத்தை குறைக்குமாறு நீதிமன்றம் சென்ற உலகில் முதலாவது தலைவன் நான் என்பதனை அனைவரும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
தற்போது அரசியலமைப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக ஒழிக்கப்படும்.
நாட்டின் ஊழல் மோசடிக்கு எதிராக செயற்பட்டவர்கள் விடயத்தில் விசேட நீதிமன்றம் அமைப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதனை ஆராய்ந்தே முடிவு எடுக்க வேண்டும் .
அதேபோன்று நாட்டில் சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது இதற்கான புதிய அமைப்புகள் உருவெடுக்க தொடங்கியுள்ளன. எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார். விடிவெள்ளி
Wow, Maithripala, what a hypocrite!
ReplyDeleteஉங்கள் வார்தைகள் இன்னும் நம்புகிறோம், ஒற்றமை, நிம்மதியை குலைக்கும்செயெல்பாட்டை யார் செகிண்றனர் என தெளிவான ஆய்வு அவசியம்.
ReplyDelete