Header Ads



மகிந்த குடும்பத்தின் வெளிநாட்டு, பயணத்திற்கு 2.3 பில்லியன் செலவு - ரணில்

வெளிவிவகார அமைச்சில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் சம்பந்தமாக கண்டறிய அதிகாரங்களுடன் கூடிய விசேட தெரிவுக்குழு நியமிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று -30- நாடாளுமன்றத்தி்ல் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சில் நடந்த ஊழல்கள் குறித்து பிரதமர் தகவல்களை வெளியிட்டு கொண்டிருந்த போது, எழுந்த சுனில் ஹந்துன்நெத்தி, இது தேடி அறிய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு, அதிகாரங்களுடன் கூடிய தெரிவுக்குழுவை நியமித்து விசாரணை நடத்துமாறு யோசனை முன்வைத்தார்.

2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் வெளிநாட்டு பயணங்களுக்காக 2.3 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் தூதரக பிரதிநிதி இல்லாத லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீடு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் மகன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் மகனது பாதுகாப்புக்காக இரண்டு படையினர் பயன்படுத்தப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஒரு வருடமும் 9 மாதங்களும் அந்த வீட்டுக்கான நிதி செலுத்தி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

339 மில்லியன் ரூபாவுக்கும் மேல் சஜின் வாஸ் குணவர்தனவின் பெயரில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளில் ஆற்றிய உரைகள், வெளிநாடு நிறுவனம் ஒன்றிடம் பணம் செலுத்தி தயார் செய்யப்பட்டவை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

1 comment:

  1. ரணிலின் இரட்டைவேடம். விமர்சிப்பதும் அவர்களைபாதுகாப்பதும் நீங்கள் தானே

    ReplyDelete

Powered by Blogger.