Header Ads



ரொஹிங்கியாவில் முஸ்லிம்களின் 1200 வீடுகள் அழிப்பு


மியன்மாரில் கடந்த ஆறு வாரத்திற்குள் ரொஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் 1,200க்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

அந்த குழு வெளியிட்டிருக்கும் செய்மதி படங்களில், நவம்பர் 10 தொடக்கம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் 820 கட்டுமானங்கள் தரைமட்டமாக்கப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

மியன்மாரின் பதற்றம் கொண்ட ரகினே மாகாணத்தில் இராணுவ நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் வீடுகள் அழிக்கப்பட்டதான குற்றச்சாட்டை அரசு நிராகரித்துள்ளது.

ரொஹிங்கியாக்கள் உலகில் அதிகம் துன்புறுத்தலுக்கு முகம்கொடுக்கும் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர். எனினும் தற்போது இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு சர்வதேச ஊடகங்கள் அனுமதிக்கப்படாமையால் வீடுகள் அழிக்கப்படும் செய்தியை உறுதி செய்ய முடியாமல் உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

மியன்மாரின் பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைந்த தாக்குதலில் ஒன்பது பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே அங்கு ரொஹிகியாக்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ரொஹிங்கியா செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டு, நடந்த மதக்கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். 

1 comment:

  1. யாஅல்லாஹ். சகோதர முஸ்லிம்களை பாதுகாப்பாயாக.

    ReplyDelete

Powered by Blogger.