குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு, தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்கிறது
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுபிராயத்தினருக்கு தண்டனை வழங்கும் வயது எல்லையை 12 ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டத்திலுள்ள தண்டனை கோவையில், சில திருத்தங்களை செய்ய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் முன் வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஓப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்ட கோவையில் தண்டனை வழங்குவதற்குரிய ஆகக் குறைந்த வயது எல்லை 8 ஆகும்.
உத்தேச திருத்தம் 12 வயதுக்குட்பட்ட சிறுவரொருவரால் குற்றமொன்று புரியப்பட்டால் தண்டனை வழங்கப்படக் கூடாது என்று கூறுகின்றது.
12 தொடக்கம் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் குற்றச் செயல்களை புரியக் கூடிய கடினமான மனநிலையை கொண்டிருந்தால் அது தொடர்பாக நீதவான் அவதானித்திருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கும் வகையிலான சரத்துகளையும் கொண்டதாக இந்த திருத்தம் அமைகின்றது.
இந்த திருத்தங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு முன் வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார்.
Post a Comment