சிரியா போரில் 1,000 ஈரான் வீரர்கள் பலி
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரான் படையினர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தாஸ்னிம் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
சிரியாவில் ஷியா பிரிவினரின் புனிதத் தலங்களைப் பாதுகாப்பதற்காப் போரிட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக, போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அறக்கட்டளையை நடத்தி வரும் முகமது அலி ஷாஹிதி தெரிவித்தார்.
முன்னதாக, சிரியா உள்நாட்டுச் சண்டையில் ஈரான் படையைச் சேர்ந்த 400 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களில் பாதி பேர் ஆப்கானியர்கள் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் தெரிவித்திருந்தார் என்று அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாகப் போரிட ஈரான் படையினரை அந்த நாடு அனுப்பியுள்ளது.
ஈரானில் வசிக்கும் ஆப்கன் ஷியா பிரிவினர் இந்தப் படையில் அதிக எண்ணிக்கையில் இணைந்துள்ளனர்.
Post a Comment