அபராதத்தை 10,000 ஆக உயர்த்துங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம்
அதிசொகுசு வாகனங்களுக்கான மிகக் குறைந்த அபராத தொகையை ரூபா 10,000 ஆக மாற்றுமாறு அகில இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சங்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வாகனங்களுக்கான மிகக் குறைந்த அபராத தொகை ரூபா 500 இலிருந்து 2,500 ஆக அதிகரிக்கப்படுவதன் காரணமாக, மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களே மிக அதிகளவில் பாதிக்கப்படுவர் என அச்சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே சட்டத்தை பிரயோக ரீதியில் அணுகி, குறித்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மோட்டார்சைக்கிள் ஓட்டுனர் ஒருவர், மாதாந்தம் எரிபொருளுக்காக செலவிடும் பணத்திலும் பார்க்க, குறித்த அபராதத் தொகை மிக அதிகம் என்பதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் கறுப்புக் கொடியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்குமாறு அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, குறித்த அபராத தொகையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, பாதை விதிமுறைகளை மீறும் ஓட்டுனர்களின் வாகனத்தின் பெறுமதிக்கு அமைய அத்தொகையை சீரமைக்குமாறு அச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் அடிப்படையில்...
100 CC குறைந்த மோ. சைக்கிள்களுக்கு - 30% (ரூ. 750)
100 CC அதிக மோ. சைக்கிள்களுக்கு - 50% - (ரூ. 1250)
அதி சொகுசு வாகனங்களுக்கு - 400% - (ரூ. 10,000)
அபராதத்தை விதிக்குமாறு, ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அபராத தொகை அதிகரிப்பு தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், நாளைய தினம் (15) பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், பாதை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதால், வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மிகக் குறைந்த அபராத தொகையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என நேற்றையதினம் (13) நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment