Header Ads



ஆண்டுக்கு 1 டாலர் ஊதியம் போதும், விடுமுறையில் செல்லமாட்டேன் - டிரம்ப்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்கான ஆண்டு ஊதியமாக 1 டாலர் மட்டும் பெற்றுக் கொள்வேன் என்று அறிவித்தார்.

மேலும், பதவிக் காலத்தின்போது விடுமுறையில் செல்ல மாட்டேன் என்றும் அவர் அறிவித்தார்.

சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 

அமெரிக்க அதிபருக்கு வழங்கப்படும் ஊதியத்தை பெற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அதிபரின் ஊதியம் என்னவென்று கூட எனக்குத் தெரியாது. எனக்கு ஊதியம் வேண்டாம். ஆனால் சட்டப்படி 1 டாலராவது நான் ஊதியமாகப் பெற வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் ஆண்டு ஊதியமாக 1 டாலர் பெறுவேன்.

எனது பதவிக் காலத்தில் நான் விடுமுறை எடுத்துக் கொள்ள மாட்டேன். நாட்டில் ஏராளமான பணிகள் காத்துக் கிடக்கின்றன. வரிகள் குறைக்கப்பட வேண்டியுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வருதல் உள்பட சுகாதாரத் துறையில் ஏராளமான வேலைகள் உள்ளன. விடுமுறை எடுத்துக் கொள்வதால் பணிகள் முடங்கிப் போகும் என்றார் டிரம்ப்.
கோடீஸ்வரரான டொனால்ட் டிரம்ப், தேர்தல் பிரசாரத்தின்போதே, ஊதியம் பெறாத, விடுமுறை எடுத்துக் கொள்ளாத அதிபராக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்க அதிபருக்கு, மாதச் சம்பளம், பயணம், கேளிக்கை உள்ளிட்ட வகைகளில் மொத்த ஆண்டு ஊதியம் சுமார் 5.69 லட்சம் டாலராகும். இதில் சில தொகைகளுக்கு வரி உண்டு.

அமெரிக்க தேசத் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன், அந்நாட்டின் முதல் அதிபராகத் தேர்வானதும் தான் ஊதியம் பெறப் போவதில்லை என்று அறிவித்தார். அந்த சமயத்தில் அவருக்குப் போதிய வருவாய் இல்லாதபோதிலும் தேச சேவைக்கு ஊதியம் பெறக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில், ஊதியத்தை ஏற்க மறுத்தார். எனினும் செல்வந்தர்களாக உள்ளவர்கள் மட்டும் ஊதியம் பெறாமல் உயர் பதவி வகிக்க முடியும் என்ற எண்ணம் ஏழை எளிய மக்களிடையே ஏற்படக் கூடும் என்பதால், நாடாளுமன்றத் தீர்மானத்தின்படி, ஆண்டுக்கு 25,000 டாலர் ஊதியத்தை அவர் ஏற்றார்.

தற்போதைய ஊதியத் தொகை 2001-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

ஹிலாரி மீது விசாரணையா?

ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, மின்னஞ்சல்கள் அனுப்ப தனியார் கணினி சேமிப்பகத்தைப் பயன்படுத்திய விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்: நாட்டில் இப்போது ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. ஹிலாரியின் மீதுள்ள புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுமா என்பதல்ல இப்போது முக்கியப் பிரச்னை என்று பதிலளித்தார் டிரம்ப்.

அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, தனியார் கணினி விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தனியார் கணினியைப் பயன்படுத்தியதால், நாட்டின் ராணுவ ரகசியங்கள் கசிந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். தான் பதவிக்கு வந்தால் ஹிலாரியைக் கைது செய்து சிறையில் அடைப்பேன் என்று டிரம்ப் கூறினார். இந்த நிலையில், தற்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.