இலங்கைக்கு GSP யும், 34 பில்லியன் ரூபாய்களையும் பெற்ற ரணில்
மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். பிரசெல்சுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அராஜகம், சர்வாதிகாரத்தில் இருந்து விடுபட்டு நல்லாட்சியை உறுதிப்படுத்துவதை நோக்கி சிறிலங்கா முன்னகர்வதையிட்டு ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சியடைவதாகவும், அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு தாம் ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க் தனது ருவிட்டர் பதிவில்,சிறிலங்காவில் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கும் என்றும், சிறிலங்காவுடன் இருதரப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவரை சிறிலங்காவுக்கு வருமாறும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள டொன்லன்ட் டஸ்க் அடுத்த ஆண்டு கொழும்பு வருவதாக உறுதியளித்திருக்கிறார்.
2
சிறிலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.
பிரசெல்சுக்குச் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்காக உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையத்தின் உதவித் தலைவருமான பிடெரிக்கா மொகேரினியை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான அபிவிருத்தி நிதி உதவியாகவே, 210 மில்லியன் யூரோ (சுமார் 34 பில்லியன் ரூபா) வழங்கப்படவுள்ளது. இது, 2007- 2013 ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
நிலையான அபிவிருத்தி, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு, மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
Post a Comment