பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளதாக, மைத்திரி சார்பு அமைச்சர்கள் தெரிவிப்பு
திறைசேரி முறிகள் விவகாரத்தால் ஒட்டுமொத்த பங்குச் சந்தை மீதான நம்பிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும். எனவே பாராளுமன்றத்தில் புதிய சட்டங்களை நிறைவேற்றியாவது இடம்பெற்ற முறைகேடுகளுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பங்குச் சந்தை மீதான நம்பிக்கையின்மை காரணமாக முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நிரபராதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ எவ்வாறு நிரூபிக்கப்படினும் அது பங்குச் சந்தை மீதான நம்பிக்கையை மென்மேலும் இழக்கச் செய்யும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் சம்பவங்களை ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, அரச நிறுவனங்களின் வெற்றியும் தோல்வியும் முகாமைத்துவத்திலேயே தங்கியிருப்பதால் அனைத்து நிறுவனங்களும் வலுவடையும் வகையில் முகாமைத்துவம் மறுசீரமைக்கப்படல் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர: அரசாங்கத்துடன் தொடர்புபட்ட 19 நிறுவனங்களில் 05 நிறுவனங்களால் மட்டும் இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இவையனைத்தும் ஒரே முகாமைத்துவத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
திறைசேரி முறிகள் கொள்வனவின் போது முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனும் அவரது மருமகனும் இணைந்து முறைகேடுகளை கையாண்டுள்ளனர். இவர்களுக்கு முன்பும் இதே பதவியிலிருந்தவர்கள் முறைகேடான வழிகளிலேயே முறிகளை கொள்வனவு செய்துள்ளனர்.
Post a Comment