பிரசவத்துக்குப் பிறகும், அக்கறை அவசியம்
கர்ப்பம் உறுதியான நாளில் இருந்து, பிரசவத்தை எதிர்கொள்ளப் போகிற அந்த நாள் பற்றிய திட்டமிடலையும் ஏற்பாடுகளையும் அவ்வப்போது செய்து கொண்டே இருப்பார்கள் கர்ப்பிணிகள். ஆனால், அவர்களில் பலரும் கோட்டைவிடுவது பிரசவத்துக்குப் பிறகான அவர்களது ஆரோக்கியம். கர்ப்ப காலத்தில் தேவைப்படுவது போலவே பிரசவத்துக்குப் பிறகும் ஆரோக்கியம் காப்பதில் அவர்களுக்கு அக்கறை அவசியம் என்கிறார் மருத்துவர் நிவேதிதா. அதற்கான வழிகளையும் சொல்கிறார்.
குழந்தை தூங்கும்போது நீங்களும் ஓய்வெடுங்கள். பிரசவமான பெண்களை அதீத மன அழுத்தத்தில் தள்ளுகிற காரணங்களில் தூக்கமின்மையே முதன்மை வகிக்கிறது. போதுமான அளவு தூங்க முடியாதபடி, எப்போதும் குழந்தையைப் பார்த்துக் கொள்கிற பொறுப்பும், ஓய்வில்லாமல் நகரும் பொழுதுகளும் அவர்களை மன இறுக்கத்துக்கு ஆளாக்கும். பலரும் குழந்தை தூங்குகிற நேரத்தில்தான் மற்ற வேலைகளைத் திட்டமிடுவார்கள். அதைத் தவிர்த்து, முதல் சில மாதங்களுக்கு குழந்தை தூங்கும்போதே தானும் தூங்கிப்பழகுவதே அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.
குழந்தைகளுடன் சேர்ந்து பேசிய படியே எல்லா வேலைகளையும் செய்யப் பழகுங்கள். குழந்தையை பாதுகாப்பாக அருகில் வைத்துக் கொண்டே அதனுடன் பேசிக்கொண்டே வேலைகளைச் செய்வது குழந்தைகளையும் குதூகலப்படுத்தும். குற்ற உணர்வு இல்லாமல் உங்களையும் வேலைகளை முடிக்க வைக்கும். தினமும் குறைந்தது ஒரு மணி நேரத்தையாவது சூரிய வெளிச்சமும் நல்ல காற்றும் உங்கள் மேல் படும்படி நடக்கப் பயன்படுத்துங்கள். அந்த ஒரு மணி நேரம் கொடுக்கும் எனர்ஜியானது மீதி 23 மணி நேரத்தை உற்சாகமாகச் செலவிட உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பிரசவத்துக்குப் பிறகான எடை அதிகரிப்பு என்பது பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னை. சுகப் பிரசவமோ, சிசேரியனோ ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பும் போதே மருத்துவர்கள் அந்தப் பெண்களுக்கான உடற்பயிற்சிகள், அவற்றை தொடங்க வேண்டிய காலக்கட்டம் பற்றியெல்லாம் அறிவுறுத்துவார்கள். சோம்பல் காரணமாக பலரும் அதை செய்வதில்லை. எனவே, மருத்துவர் சொல்கிற பயிற்சிகளை முறையாக மேற்கொண்டால், வயிறு பெருப்பது, இடுப்பு மற்றும் தொடைகளில் சதை சேர்வது போன்றவை வராமல் தடுக்கலாம்.
கர்ப்பமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட உணவுகளுக்கும், பிரசவத்துக்குப் பிறகு எடுத்துக் கொள்கிற உணவுகளுக்கும் வித்தியாசம் உண்டு. பிரசவத்துக்குப் பிறகு கொழுப்பு குறைவான, அதே நேரம் தாய்ப்பால் கொடுப்பதால் உடல் இழக்கிற சத்துகளை ஈடுகொடுக்கும் வகையில் ஊட்டம் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். திடீரென ஏற்படுகிற ரத்தப் போக்கு, இடுப்பு வலி, மார்பகத் தொற்று போன்றவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
குழந்தை பிறந்த பிறகான மன அழுத்தமும் மிகவும் சகஜமானது. குறிப்பாக தனிக்குடித்தனம் செய்கிற பெண்களிடம் இது அதிகம். உடல் சந்திக்கிற ஹார்மோன் மாற்றங்கள், தனியே குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியுமா என்கிற பயம் போன்றவையே இதற்குக் காரணம். சில நாட்களில் இது தானாக சரியாகி விடும். அப்படி ஆகாமல், தனிமை உணர்வு, குற்ற உணர்வு, காரணமற்ற அழுகை, பாதுகாப்பற்ற மனநிலை போன்றவை நீடித்தால், மனநல ஆலோசனை பெற்று சரி செய்து கொள்ள வேண்டும்.
Post a Comment