தலை ஒட்டி பிறந்த குழந்தைகள், தனித்தனியாக பிரிப்பு
அமெரிக்காவில் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் தலைமையிலான மருத்துவ குழுவினர் 16½ மணி நேரம் ஆபரேசன் செய்து தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்து எடுத்தனர்.
அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி கிறிஸ்டியன் மேக்டொனால்டு- நிகோல், இவர்களுக்கு கடந்த ஆண்டு (2015) செப்டம்பர் 9-ந்தேதி தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
இவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என பெயரிட்டனர். தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை தனித்தனியாக பிரிக்க நியூயார்க்கை சேர்ந்த மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சை மேக்டொனால்டு நிகோல் தம்பதி அணுகினர்.
பிறந்து ஓராண்டுக்கு பிறகு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். அவரது அறிவுரையின் பேரில் பிறந்து 13 மாதத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் தலைமையிலான மருத்துவ குழுவினர் 16½ மணி நேரம் ஆபரேசன் செய்து தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்து எடுத்தனர்.
அவர்களில் ஜடோன் முதன் முதலில் பிரித்தெடுக்கப்பட்டான். அவனது மண்டை ஓடு சீரமைக்கப்பட்டு சக்கர படுக்கையில் வைத்து வெளியே கொண்டு வரப்பட்டான். அதன் பின்னர் அனியாசும் எடுத்து வரப்பட்டான்.
தலை ஒட்டிய நிலையில் இருந்த மகன்கள் தனித்தனியாக வந்ததை பார்த்த அவர்களது பெற்றோர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர். இது குறித்து கூறிய அவர்கள் இதை சொல்ல தங்களுக்கு வார்த்தைகளே இல்லை என தெரிவித்து டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சுக்கு நன்றியை காணிக்கையாக்கினர்.
இது டாக்டர் குட்ரிச்சின் தலை ஒட்டி பிறந்த குழந்தைகளை பிரித்து எடுத்த 7-வது ஆபரேசன் ஆகும். மேலும் சர்வதேச அளவில் தலை ஒட்டி பிறந்தவர்களை பிரித்தெடுத்த 59-வது ஆபரேசனாக கருதப்படுகிறது. இத்தகைய அறுவை சிகிச்சை கடந்த 1952-ம் ஆண்டு முதல் செய்யப்படுகிறது.
Post a Comment