சிறிலங்காவிடம் அவசர உதவி கோரிய, அமெரிக்காவின் ஏவுகணை நாசகாரி
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்து, சிறிலங்கா கடற்படையின் அவசர உதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க கடற்படையின் முன்னோடித் தளபதிகளில் ஒருவரான, அட்மிரல் கிரேஸ் ஹொப்பர் நினைவாக, யுஎஸ்எஸ் ஹொப்பர் என்று பெயரிடப்பட்ட, வழிகாட்டல் ஏவுகணை நாசகாரியே சிறிலங்கா கடல் எல்லைக்குள் கடந்த மாதம் 30ஆம் நாள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ரொமஹோக், ஹார்பூன் ரக ஏவுகணைகளை ஏவுக்கூடிய, நீருக்கடியில் செலுத்தப்படும் டோபிடோஸ் எனப்படும் ஏவுகணைகளை செலுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டது இந்த நாசகாரி.
கடலில் இருந்து தரை, வான், மற்றும் கடல் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை வசதிகளைக் கொண்ட, 154 மீற்றர் நீளம் கொண்ட இந்த நாசகாரி, பேர்ள் துறைமுகத்தில் இருந்து, அமெரிக்க கடற்படையின் 5ஆவது மற்றும் 7ஆவது கப்பல் படைகளால் கண்காணிக்கப்படும், இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் நிலையான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
23 அதிகாரிகள், 24 இளநிலை அதிகாரிகள், 291 கடற்படையினர் பணியாற்றும் யுஎஸ்எஸ் ஹொப்பர் நாசகாரியின் கட்டளை அதிகாரியான கொமடோர் ஜே.டி.கெய்னி, கடந்த செப்ரெம்பர் 29ஆம் நாள் இரவு 9 மணியளவில் அமெரிக்க கடற்படையின் 15 ஆவது நாசகாரிகள் ஸ்குவாட்ரன் தலைமையகத்துக்கு ஒரு அவசர கோரிக்கையை விடுத்தார்.
தமது கப்பலில் உள்ள கடற்படை மாலுமி ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக அவர் கோரியிருந்தார்.
அப்போது யுஎஸ்எஸ் ஹொப்பர் சிறிலங்கா கரையில் இருந்து 165 கடல் மைல் தொலைவில் இருந்தது. யுஎஸ்எஸ் ஹொப்பரில், ஹெலிகொப்டர்கள் தரித்து நிற்கும் வசதிகள் இல்லை.
அவசர தேவைக்கு ஹெலிகொப்டர்களைத் தரையிறக்க சமிக்ஞை தொகுதிகள் இருந்தாலும், உடனடியாக அங்கு விரைந்து வரக் கூடிய தொலைவில் அமெரிக்காவின் எந்த விமானங்களோ, ஹெலிகொப்டர்களோ இருக்கவில்லை.
இதையடுத்து, அமெரிக்க கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையிடம் உதவி கோரினர்.
இதுதொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே, சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைவதற்கு, யுஎஸ்எஸ் ஹொப்பர் நாசகாரிக்கு அனுமதியைக் கொடுத்தார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.
அமெரிக்க நாசகாரியில் இருந்து சிறிலங்கா கடற்படைப் படகு மூலம், அமெரிக்க மாலுமியை ஏற்றிவர உத்தரவிடப்பட்டது.
நோயுற்றிருந்த மாலுமிக்கு கப்பலில் இருந்த மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க, யுஎஸ்எஸ் ஹொப்பர் நாசகாரி, தனது அதிஉச்ச வேகமான 30 நொட்ஸ் வேகத்தில் சிறிலங்கா கடல் எல்லையை நோக்கி விரைந்தது.
மறுநாள், செப்ரெம்பர் 30ஆம் நாள் காலை 7.30 மணியளவில், யுஎஸ்எஸ் ஹொப்பர் சிறிலங்கா கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டது. சிறிலங்கா கடற்படையின் இரண்டு டோறா அதிவேகத் தாக்குதல் படகுகள், அதனை நெருங்கின.
சுகவீனமுற்றிருந்த அமெரிக்க மாலுமி, டோறாவுக்கு மாற்றப்பட்டு, கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டார். கொழும்பில் உள்ள ஆசிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
10 மணித்தியாலங்களுக்குள் தமது மாலுமியை பல்வேறு கட்டளைத் தலைமைகள், அரசாங்கங்களையும் தாண்டி தம்மால் காப்பாற்ற முடிந்ததாக யுஎஸ்எஸ் ஹொப்பரின் கட்டளை அதிகாரி கொமடோர் ஜே.டி.கெய்னி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் மாத்திரம் அமெரிக்கக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தன.
எனினும், யுஎஸ்எஸ் ஹொப்பர், சிறிலங்கா கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவு வரை வந்து சென்றது குறித்தோ, அமெரிக்க மாலுமிக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கப்பட்டது குறித்தோ, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சோ, கடற்படையோ எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment