Header Ads



இனவாதத்தை தூண்டுவதைவிட, பிச்சை எடுக்கலாம்

வடக்கில் தூண்டப்படும் இனவாதமோ தெற்கில் தூண்டப்படும் இனவாதமோ அந்தந்த இனங்களைச் சேர்ந்த மக்களின் நிலைப்பாடு அல்ல. இது வங்குரோத்து அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.

இனவாதத்தைத் தூண்டுவதைவிட கொழும்பு புறக்கோட்டையில் யாசகம் கேட்பது மேல் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

நாட்டில் இனவாதம் பரப்பப்படுவதால் உண்மையான பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. ஓரிடத்தில் கொளுத்திவிட்டால் எல்லா இடங்களுக்கும் தீபோல் பரவக்கூடியதுதான் இந்த இனவாதம்.

விக்னேஸ்வரன் இனவாதம் பேசியமை ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைப்பாடு அல்ல. அதேபோல், தெற்கில் பேசப்படும் இனவாதமும் ஒட்டுமொத்த சிங்களவர்களின் நிலைப்பாடு அல்ல.

திருமலையில் இருக்கின்ற 85 எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது இந்த நாட்டு மக்களின் சொத்து. இந்தப் பிரச்சினை பற்றி நாம் பேசுகின்றோமா?

மத்தள விமான நிலையத்தையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனாவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதுவும் மக்களின் பிரச்சினை. இதைப் பற்றிப் பேசுகின்றோமா?

இதுபோல், எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. இனவாதத்தைக் கிளப்பிவிட்டால் இந்தப் பிரச்சினைகளை மறைப்பது இலகு. இதற்காகத்தான் இனவாதம் எழுப்பப்படுகின்றது.

இனவாதம் என்பது மக்களின் நிலைப்பாடு அல்ல. அரசியல் வங்குரோத்து அடைந்தவர்களின் செயற்பாடுதான் இந்த இனவாதம். இதனால், நல்லாட்சி என்ற பெயரில் கொள்ளைதான் நடக்கின்றது.

நாம் எல்லோரும் இந்தஇனவாதக் கருத்துக்களை செவிமடுத்துக்கொண்டு இருக்கும்போது மறுபுறம் கொள்ளை இடம்பெறுகின்றது. யுத்தத்தை விடவும் ஆபத்தானது இந்த இனவாதம்.

ஆயுதத்தை விடவும் வார்த்தையால் மிக இலகுவாக மனிதர்களைக் கொல்ல முடியும். உலகில் அதிகம் பேர் கொல்லப்பட்டிருப்பது இனவாத வார்த்தையால்தான்.

ஆகவே, விக்னேஸ்வரனின் வார்த்தையைக் கணக்கில் எடுக்கத் தேவையில்லை. தெற்கில் தூண்டப்படும் இனவாதத்தையும் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.

இவர்கள் இவ்வாறு இனவாதத்தைத் தூண்டுவதைவிட கொழும்பு புறக்கோட்டையில் யாசகம் கேட்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.